2022-23-ல் ரெப்கோ வங்கியின் வர்த்தகம் ரூ.17,500 கோடியை தாண்டியது

2022-23-ல் ரெப்கோ வங்கியின் வர்த்தகம் ரூ.17,500 கோடியை தாண்டியது
Updated on
1 min read

சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். இசபெல்லா தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.17,746 கோடியாகவும், வைப்புநிதி 7% வளர்ச்சியுடன் ரூ.9,527 கோடியாகவும் கடன்கள் 9% வளர்ச்சியோடு ரூ.8,219 கோடியாகவும் உள்ளது. மேலும் முடிந்த நிதியாண்டில் வங்கியின் நிகர இலாபம் 10.15 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.67.42 கோடியாக உள்ளது.

மார்ச் 2023 வரையிலான வங்கியின் நிகர மதிப்பு ரூ.829 கோடியாகும். வங்கியின் பங்குதாரர்களான 2022-23-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக 20% வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கியின் சொத்துக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதால், வங்கியின் மொத்த வாராக் கடன் 11.13% லிருந்து9.43% ஆகவும் நிகர வாராக்கடன் 4.97% லிருந்து 4.17% ஆகவும் குறைந்துள்ளது.

வாராக்கடனை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ரெப்கோ வங்கிக்கு 'சிறந்த மனிதவள கண்டுபிடிப்பு', 'சிறந்த முதலீட்டு முயற்சி' மற்றும் 'சிறந்த சேகரிப்பு முயற்சி' என்ற 3 பிரிவுகளில் கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு விருதுகளை வழங்கியது.

வங்கியின் முக்கிய குறிக்கோளான தாயகம் திரும்பியோரின் மறுவாழ்வை நிறைவேற்றும் வகையில், தாயகம் திரும்பியோர் அறக்கட்டளை மூலமாக 36,355 பேருக்கு பல்வேறு நலத் திட்டங்களுக்காக 2022-23ம் நிதியாண்டில் ரூ.785.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.20,000 கோடி வர்த்தகத்தை அடையவும் தாயகம் திரும்பியோரின் மறுவாழ்வுக்காகவும் வங்கி வலுவாக செயல்பட முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in