

கோவை: கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவும் நிதி நெருக்கடியால் தமிழகத்தில் சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த நூற்பாலைகள் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். வங்கி கடனுக்கான தவணையை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 2 ஆயிரம் நூற்பாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் ஆயிரம் நூற்பாலைகள் ‘எம்எஸ்எம்இ’ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்தவையாகும். பஞ்சு விலையில் காணப்பட்ட நிலையற்ற தன்மை, ஏற்றுமதி வணிகம் பாதிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஓராண்டாக சிறு பிரிவை சேர்ந்த நூற்பாலைகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
இதுதொடர்பாக, மறுசுழற்சி ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. குறிப்பாக, கிராமப்புற பெண்கள் அதிகம் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர். இதன் காரணமாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜவுளித் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
பஞ்சு விலையில் காணப்பட்ட நிலையற்ற தன்மை, மொத்த ஜவுளி ஏற்றுமதி 28 சதவீதம் பாதிப்பு என்பன உட்பட பல்வேறு காரணங்களால் ஜவுளித்தொழில் கடும் நெருக்கடியை எதிர்கொண் டுள்ளது.
ஆர்டர்கள் குறைந்த காரணத்தால் ஏற்றுமதி தர நூல் மற்றும் துணி உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் சிறு நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் மற்றும் துணி வகைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில் செயல்படும் எம்எஸ்எம்இ பிரிவை சேர்ந்த ஆயிரம் நூற்பாலைகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக லாபம் ஈட்டவில்லை.
நிதி நெருக்கடியால் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் பல சிறு நூற்பாலைகள் திவாலாகும் நிலையில் உள்ளன. இந்நிலை நீடித்தால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.
‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமல் செயல்பட்டால் மட்டுமே ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். ஜிஎஸ்டி வருவாயை வைத்து மட்டும் தொழில் வளர்ச்சியை மதிப்பிடக் கூடாது.
மத்திய அரசு உடனடியாக எம்எஸ்எம்இ நூற்பாலைகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை களுக்கு தீர்வு காண வங்கி கடன் தவணையை திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். இல்லையெனில் விரைவில் தமிழகத்தில் பல நூற்பாலைகள் மூடப்பட வேண்டிய அவல நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.