

கோவை: பண்டிகை காலம், விவசாய அறுவடை பணி உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் கோவை திரும்பவில்லை. இதனால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை பிரிவை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை காலத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இவ்வாண்டு சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி காரணமாக வழக்கத்தை விட கூடுதலாக வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் கணிசமான தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வார்ப்பட தொழிலுக்கான தேசிய தொழில் அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’(ஐஐஎப்) தென் மண்டல தலைவர் முத்துக்குமார் கூறியதாவது: சொந்த ஊர்களுக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள் பலர் கோவை திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் 30 சதவீத வடமாநில தொழிலாளர்கள் திரும்பவில்லை. இதுபோன்ற நிலை ஆண்டுதோறும் வழக்கமாக காணப்படுவதுதான்.
இந்தாண்டு வழக்கத்தை விட அதிக தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதே தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணமாகும். வார்ப்பட தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் அதிகம் பெற தொடங்கியுள்ள நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநில தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் தொழில்முனைவோர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அனைவரும் பணிக்கு திரும்புவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘கொடிசியா’ ராணுவ தளவாட மையத்தின் இயக்குநர் ராமமூர்த்தி கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள உற்பத்திப்பிரிவு சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். சொந்த ஊர் சென்றவர்களில் பலர் திரும்பி வராததால் கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.