Published : 14 Oct 2017 10:39 AM
Last Updated : 14 Oct 2017 10:39 AM

ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி பொருளாதார முன்னேற்றம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

மத்திய அரசு சமீபத்தில் செயல்படுத்திய பண மதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கிவிட்டது. தற்போது இந்திய பொருளாதாரம் ஸ்திரமான, உறுதியான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

மத்திய அரசு மேற்கொண்ட அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களால் பொருளாதார நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் வலுவான, ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது என்றார். வாஷிங்டனில் இந்திய தொழில் வர்த்தகத்துறை சம்மேளனம் (ஃபிக்கி) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பட்டியலிட்டு பேசிய அவர் மேலும் கூறியது:

கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறையானது தற்போது முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் அடிப்படை சீர்திருத்தத்துக்கு வழி கோலியது. ஒரு முக வரி விதிப்பானது பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வழியேற்படுத்தியுள்ளது என்றார்.

இந்தியாவில் தங்கள் அரசு மேற்கொண்ட உறுதியான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட ஜேட்லி, இதன் மூலம் கட்டமைப்புத் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். இதேபோல வங்கித் துறையின் வாராக் கடன் சுமையைக் குறைக்க திவால் மசோதா சட்டம் கொண்டு வரப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

2016-17-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதானது இந்திய பொருளாதாரத்தின் மீது பிற நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதையே காட்டுவதாகக் கூறினார். சர்வதேச பொருளாதரத்துக்கும், இந்திய பொருளாதாரத்துக்குமான தொடர்பை விளக்கிய அவர், இன்பிராஸ்டிரக்சர் பண்ட் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறிப்பாக தொழில் தொடங்க எளிதான வழி முறைகள் உருவாக்கப்பட்டது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு என்று சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேட்லியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், பொருளாதார விவகாரத்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். -ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x