இயற்கை விவசாயத்தோடு நாட்டு மாடுகள் வளர்த்து கூடுதல் வருவாய் ஈட்டும் பொறியியல் பட்டதாரி: சாணம் 1 கிலோ ரூ.10, கோமியம் 1 லிட்டர் ரூ.20-க்கு விற்பனை

நாட்டின மாடுகளை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி ஜெ.விஜயபாண்டி.
நாட்டின மாடுகளை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி ஜெ.விஜயபாண்டி.
Updated on
1 min read

மதுரை: இயற்கை முறை விவசாயத்தோடு, நாட்டு மாட்டு பால் மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களான தயிர், நெய் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார் பொறியியல் பட்டதாரி ஒருவர். மேலும் ஒரு கிலோ சாணத்தை ரூ.10-க்கும், ஒரு லிட்டர் கோமியத்தை ரூ.20-க்கும் விற்பதன் மூலம் கழிவுகளையும் பணமாக்கி வருகிறார்.

உசிலம்பட்டி அருகே வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜெ.விஜயபாண்டி(35). இவர், இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், நாட்டு மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்து விற்கிறார்.

பாலில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களான தயிர், நெய் ஆகியவற்றையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். மாட்டுச்சாணத்தை ஒரு கிலோ ரூ.10-க்கும், கோமியம் ஒரு லிட்டர் ரூ.20-க்கும் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து இயற்கை விவசாயி ஜெ.விஜயபாண்டி கூறியதாவது: இயற்கை முறை விவசாயத்தில் நெல் பயிரிட்டு வருகிறேன். மேலும் கால்நடை வளர்ப்பு மூலமும் வருவாய் ஈட்டி வருகிறேன். இதற்காக நாட்டின பசு மாடுகளை வளர்த்து வருகிறேன்.

பால் விற்பனையோடு, பாலிலிருந்து தயிர், நெய் ஆகியவற்றையும் தயாரித்து விற்று வருகிறேன். ஒரு லிட்டர் நெய் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கிறேன். கழிவாகும் நாட்டு மாட்டுச் சாணத்தை ஒரு கிலோ ரூ.10-க்கும், ஒரு லிட்டர்கோமியத்தை ரூ.20-க்கும் விற்பனை செய்கிறேன்.

எனது பெற்றோர், மனைவி, உறு துணையாக உள்ளனர். விவசாயி கள் பயிர் சாகுபடி செய்வதோடு நின்று விடாமல், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in