

புதுடெல்லி: நாட்டில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த அக்டோபர் 2021-ல் சில்லறை பணவீக்கம் 4.48 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது ஏப்ரல் 2023-ல் சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புள்ளியியல் அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் பணவீக்கத்தை 4 முதல் 6 சதவீதத்திற்கும் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக ரெப்போ வட்டி விகிதத்தை அவ்வப்போது மாற்றியமைத்தது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்தாற்போல் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் குறைந்து ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பான 6-க்கும் கீழே உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத சில்லறை பணவீக்க குறையீடு மேலும் குறைந்து 4.70 சதவீதமாக உள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் ஆறுதல் மண்டலத்தில் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. சில்லறை பணவீக்கம் குறைய மிக முக்கியமான காரணமாக நுகர்வோர் உணவு விலைக் குறியீடு குறைந்தது உள்ளது.