சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு
புதுடெல்லி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு - மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) வரியிலிருந்து மத்திய நிதி அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. ஜூன் 30-ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
வரி விகித ஒதுக்கீடு (டிஆர்க்யூ) உரிமம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விலக்கு வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக, வரி விகித ஒதுக்கீடு உரிமம் கொண்டிருப்பவர்கள், குறிப்பிட்ட அளவு இறக்குமதியை குறைந்த வரி விகிதத்தில் மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும் வழக்கமான அளவில் வரி விதிக்கப்படும்.
இந்நிலையில் 2023-24 நிதி ஆண்டுக்கான வரி விகித ஒதுக்கீடு உரிமம் கொண்டிருப்பவர்கள், மே 11 முதல் ஜூன் 30-ம் தேதி வரையில் சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி இல்லாமல் சோயா, சூரியகாந்தி எண்ணெயை இறுக்குமதி செய்துகொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
