

புதுடெல்லி: ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறையை கணிசமான அளவில் குறைக்கவும், சமநிலையைப் பேணிடவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தின. அதன் விளைவாக, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் போனதால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மிகவும் பாதிப்படைந்தது.
இந்த பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் விதமாக கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இந்த விலைச் சலுகையை பயன்படுத்தி இந்தியா அதிக அளவிலான கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்தது. இது, இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு சப்ளை செய்யும் வரையில் ஒபெக் நாடுகள் தான் இந்த வர்த்தகத்தில் 90 சதவீத பங்களிப்பினை வழங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு புள்ளிவிவரத்தின்படி, ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஏப்ரல் 2022 மற்றும் ஜனவரி 2023-க்கு இடையில் 3,479 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.90 லட்சம் கோடி ஆகும். வர்த்தகப் பற்றாக்குறை இந்த அளவு உயர்ந்ததற்கு ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தக பங்குதாரர் வரிசையில் ரஷ்யா 25-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது, சீனாவைத் தொடர்ந்து அந்த நாடு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் மிகவேகமாக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வர்த்தக அமைச்சகம் முன்வந்துள்ளது.
மேலும், ரஷ்யாவுக்கான தனது ஏற்றுமதி திறனையும்,அளவையும் விரிவுபடுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிய அனைத்து ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களையும் (இபிசி) வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய முக்கியமான கூடுதல் பொருட்களை அடையாளம் காணுமாறும் அந்த கவுன்சில்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜவுளி மற்றும் விவசாயப் பொருட்களை ரஷ்யாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.எனினும், நமது ஏற்றுமதி திறனை அதிகரித்து ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் சமநிலையை பேண வேண்டும் என்பதே வர்த்தக அமைச்சகத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வர்த்தக அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.