

கோவை: இந்திய கடற்படையின் விமான பிரிவில், முக்கிய பொருட்களில் 90 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக கடற்படை துணைத் தலைவர், ரியர் அட்மிரல் தீபக் பன்சல் தெரிவித்தார்.
கோவை கொடிசியா டிபன்ஸ் இன்னொவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சிடிஐஐசி) சார்பில் கடற்படையின் விமான பிரிவுக்கு தேவையான உதிரிபாகங்கள் உற்பத்தி தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கிவைத்த பிறகு ரியர் அட்மிரல் தீபக் பன்சல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய கடற்படையின் விமான பிரிவில், விமானம் அல்லாத முக்கிய பொருட்களில் 90 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
நவீன விமான பாகங்களில் ஒன்று முதல் இரண்டு சதவீதமும், இலக்கை அடைய பயன்படுத்தப்படும் பாகங்களில் 30 முதல் 40 சதவீதமும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. எனவே, விமான உதிரிபாகங்கள், இலக்கை அடைய பயன்படுத்தப்படும் பாகங்கள் தயாரிக்கும் திறனுடைய நிறுவனங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
விமானத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகள், இன்ஜின் போன்றவற்றை நாம் இன்னும் உள்நாட்டில் தயாரிக்கவில்லை. அவற்றை தயாரிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது.
இந்திய கடற்படையின் விமானப் பிரிவு தன்னிறைவு பெறுவதற்காக இலக்கை ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கிறோம். தற்போது 585 பொருட்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது சிடிஐஐசி இயக்குநர்கள் பி.பொன்ராம், ஆர்.ராமமூர்த்தி, ஜி.தேவராஜ், ஆர்.சசிதரன், வி.திருஞானசம்பந்தம், கொடிசியா செயலர் ஆர்.சசிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.