

கோவை: ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பம்ப்செட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கான பம்ப்செட் தேவையில் 55 சதவீதம் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பம்ப்செட்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 0.5 எச்பி முதல் அதிகபட்சமாக 50 எச்பி மற்றும் அதற்கு மேல் திறன்கொண்ட பம்ப்செட்கள் தயாரிக்கப்படுகின்றன.
கோடை காலத்தில் பம்ப்செட் தேவை அதிகரித்துவந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக வீடு மற்றும் விவசாய பயன்பாடுக்கான பம்ப்செட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(சீமா) தலைவர் விக்னேஷ் கூறும்போது, “கடந்த பல மாதங்களாக மந்தமாக காணப்பட்ட பம்ப்செட் சந்தை கோடை காலம் தொடங்கியதால் நெருக்கடியில் இருந்து மீண்டு வர தொடங்கியது. திடீரென பெய்துவரும் கோடை மழையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பம்ப்செட் தேவை குறைந்துள்ளது” என்றார்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறும்போது, “பம்ப்செட் சந்தையில் நிலவும் மந்தநிலையால் பெரிய நிறுவனங்களே தள்ளாடும் நிலையில் குறுந்தொழில் நிறுவனங்களில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகள், வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தியுள்ளது.
தனி வீடுகள் எண்ணிக்கை குறைந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால் பம்ப்செட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 40 பேர் பணியாற்றிய இடங்களில் தற்போது 12 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் மட்டுமின்றி தொழில்முனைவோர் பலரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தற்காலிகமாக வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர்” என்றார்.