

புதுடெல்லி: பொதுமக்களுக்கு விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக சர்வதேச நில வரங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை டன்னுக்கு 200 டாலர் முதல் 250 டாலர் வரை குறைந்துள்ளது. அதன் பலனை நுகர்வோருக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) குறைக்க நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் சமையல் எண்ணெய் வகைகள் மீதான எம்ஆர்பி-யை குறைத்துள்ளன. மதர் டெய்ரி, தாரா பிராண்ட் லிட்டருக்கு ரூ.15-20 வரை விலைக் குறைப்பை அறிவித்துள்ளன.
திருத்தப்பட்ட எம்ஆர்பி கொண்ட தயாரிப்புகள் அடுத்த வாரம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் அறிவுறுத் தலையடுத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கமும் (எஸ்இஏ) விலைக் குறைப்பு தொடர்பாக ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதனை ஏற்று மற்ற நிறுவனங்களும் விரைவில் சமையல் எண்ணெய் எம்ஆர்பி-யை குறைக்கும் என தொழில்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
கடந்த ஓராண்டில் நிலக்கடலை தவிர, அனைத்து வகையான சமையல் எண்ணெய்களின் விலையும் குறைந்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.