

பெங்களூரு: மின்சார வாகனத்தின் சார்ஜருக்கு கூடுதலாக வசூலித்த ரூ.288 கோடி வாடிக்கையாளருக்கு திருப்பித் தரப்படும் என மின் வாகன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
காலநிலை மாற்றத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புதைபடிவ எரிபொருள் (பெட்ரோல், டீசல்) பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், மின் வாகனங்களுக்கு விரைவாக மாறுதல் மற்றும் உற்பத்தி செய்தல் (FAME) திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், ‘பேம்’ திட்டத்தில் முறைகேடு நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஹீரோ மோட்டார், டிவிஎஸ் மோட்டார், ஏத்தர் எனர்ஜி மற்றும் ஓலா ஆகிய 4 நிறுவனங்களும் மின்வாகனங்களுக்கான சார்ஜருக்கு அதிக விலை வசூலிப்பது தெரியவந்துள்ளது. இது ‘பேம்’ திட்டத்தை மீறும் செயல் என்பதால் மானியம் ரத்தாக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், ஓலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஓலா எஸ்1 புரோ மாடல் ஸ்கூட்டர் சார்ஜருக்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.130 கோடியை வாடிக்கையாளருக்கு திருப்பித் தர முடிவு செய்துள்ளோம். 2019-20 நிதியாண்டு முதல் வாகனம் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இந்ததொகை வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதுபோல ஏத்தர் நிறுவனம் 95 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.140 கோடியையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 87 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15.61 கோடியையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 1,100 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2.23 கோடியையும் திருப்பித் தர ஒப்புக் கொண்டுள்ளன.