யூகோ வங்கியின் ஆண்டு நிகர லாபம் ரூ.1,862 கோடி
சென்னை: யூகோ வங்கி 2023-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.581.24 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த 2022-ம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.312.18 கோடியாக இருந்தது. இது 86.19 சதவீத வளர்ச்சியாகும். வங்கியின் ஆண்டு நிகர லாபம் இதுவரை இல்லாத உச்சமாக ரூ.1,862 கோடியாக உயர்ந்துள்ளது.
வங்கியின் சர்வதேச வணிகம் கடந்த ஆண்டு ரூ.3,35,850.24 கோடியாக இருந்த நிலையில் அது 16.14 சதவீதம் வளர்ச்சி பெற்று 2023 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி சர்வதேச வணிகம் ரூ.4,10,967.19 கோடியாக உள்ளது. இதுவும் வங்கி வரலாற்றில் புதிய உச்சமாகும்.
அதேபோல வங்கியின் 4-வது காலாண்டு நிகர வட்டி வருவாய் ரூ.1,652.39 கோடியிலிருந்து ரூ.1,972.12 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு நிகர வட்டி வருவாயும் கடந்த ஆண்டைக்காட்டிலும் 13.44 சதவீதம் உயர்ந்து ரூ.6,472.95 கோடியிலிருந்து ரூ.7,343.13 கோடியாக உள்ளது.
சர்வதேச டெபாசிட் அளவும் கடந்த ஆண்டில் ரூ.2,24,072.90 கோடியாக இருந்த நிலையில் புதிய உச்சமாக ரூ.2,49,337.74 கோடியாக உள்ளது. இது 11.28 சதவீத உயர்வாகும்.
அதேசமயம் வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு கடந்த ஆண்டு ரூ.10,237.43 கோடியாக (7.89%) இருந்த நிலையில், தற்போது ரூ.7,726.46 கோடியாக (4.78%) குறைந்துள்ளது. இது 311 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகும். நிகர வாராக்கடன் அளவும் கடந்த ஆண்டை விட 1.29% குறைந்து தற்போது ரூ.2,018.02 கோடியாக இருப்பது ஆரோக்கியமான அம்சமாகும்.
யூகோ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
