

விருதுநகர்: கொய்யா சாகுபடி கை கொடுக்காததால், விருதுநகர் பகுதியில் முதன்முறையாக பட்டுப்புழு வளர்க்க மல்பெரி சாகுபடி செய்துள்ளார் அழகாபுரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.
விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பட்டுப்புழு வளர்க்கும் ஆர்வத்தில் ரமேஷ் மல்பெரி சாகுபடியை விருதுநகர் பகுதியில் முதன் முறையாகத் தொடங்கி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: அப்பா, தாத்தா காலத்திலிருந்தே கொய்யா சாகுபடி செய்து வருகிறோம். தற்போது லக்னோ 49 என்ற வகை சிவப்பு கொய்யா 4 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். தை, மாசி, பங்குனி மற்றும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை கொய்யா அறுவடை நடக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு சுமார் 100 கிலோ வரை காய்க்கும். கிலோ ரூ.25-க்கு விற்பனையான கொய்யா தற்போது கிலோ ரூ.15-க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் போதிய லாபம் இல்லை.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதமரின் உதவித் தொகை பெறும் பயனாளிகளில் முன்னோடி விவசாயி எனத் தேர்வு செய்யப்பட்டு, வேளாண் துறை சார்பில் குஜராத் அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கு, பிரதமருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு மல்பெரி சாகுபடி குறித்து பிற விவசாயிகளிடம் அறிந்து கொண்டேன். அதனால், பட்டுப்புழு உற்பத்தியில் ஆர்வம் ஏற்பட்டது.
இதையடுத்து, அரசு பட்டுப்புழு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் ஓசூரில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றேன். தற்போது 3 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்துள்ளேன். பட்டுப்புழு வளர்ப்பதற்காக புதிதாக கட்டிடம் ஒன்றும் கட்டி வருகிறேன். கூட்டுப் புழுக்களை வாங்கி வந்து 20 நாட்கள் மல்பெரி இலை கொடுத்து 27 முதல் 29 டிகிரி வெப்ப நிலையில் வளர்க்க வேண்டும். அதன் பின்னர், தென்காசி, தேனி மாவட்டங்களில் பட்டுப் புழுக்களை விற்பனை செய்யலாம். கிலோ ரூ.600-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.