

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் மழை பொய்த்ததால் மிளகாய் மகசூல் பாதிக்கப்பட்டதோடு, விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இளையான்குடி வட்டாரத்தில் இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், அளவிடங்கான், சாத்தனூர், சமுத்திரம், கோட்டையூர், கல்வெளிப் பொட்டல், கரும்பு கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 10,000 ஏக்கரில் ராமநாதபுரம் முண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விதைக்கப்பட்டு, ஜனவரி முதல் மே மாதம் பாதி வரை மிளகாய் பறிக்கப்படும்.
ஆனால் நடப்பு பருவத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்யாததால் மிளகாய் காய்ப்பு குறைந்துள்ளது. இதனால் வாரத்துக்கு ஒருமுறை பறிக்க வேண்டிய மிளகாய், 15 நாட்கள் கடந்து தான் பறிக்கப்படுகிறது. மேலும் ஒரு ஏக்கருக்கு ஒருமுறை பறித்தால் 20 முதல் 30 மூட்டைகள் வரை மிளகாய் கிடைக்கும். ஆனால் 10 மூட்டைகள் கூட கிடைக்கவில்லை.
மேலும் விலையும் கடந்த ஆண்டை விட கிலோ ரூ.150 வரை குறைந்துள்ளது. இதனால் மகசூல் பாதிப்போடு, விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து சாலைக்கிராமம் விவசாயிகள் கூறியதாவது: நடப்பு பருவத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பிப்ரவரி மாதமே காய்ப்பு நின்றுவிட்டது. ஒருசில இடங்களில் செடிக்கு ஒன்றிரண்டு மட்டுமே காய்க்கிறது. மேலும் கடந்த ஆண்டு ஒரு கிலோ மிளகாய் ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது.
ஆனால் தற்போது ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்கிறது. இதனால் சாகுபடி செலவுக்கு கூட போதாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.