

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோர் சார்பில் முதல் முறையாக குறுந் தொழில்களுக்கென பிரத்யேக தொழிற்பேட்டை, கோவை கீரணத்தம் பகுதியில் அமைக்கப்படுகிறது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் நகரப் பகுதிக்குள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந் தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் குறுந் தொழில்களுக்கென கீரணத்தம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர் குறுந் தொழில் முனைவோர்.
இது தொடர்பாக, ‘காட்மா’ தலைவர் சிவக்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மக்கள் தொகை அதிகரிப்பு, நகர விரிவாக்கம் காரணமாக நகருக்குள் செயல்படும் குறுந் தொழில் நிறுவனங்கள் மீது காவல்நிலையம், மாசு கட்டுப்பாட்டுவாரியம் உள்ளிட்டவற்றில் புகார் அளிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் குறுந் தொழில்களுக்கென தனியாக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என கடந்த 2007-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். சென்னையில் இதுபோன்ற தொழிற்பேட்டைகள் உள்ளன. இடவசதி குறைவாக உள்ள இடங்களில் அடுக்குமாடி குறுந் தொழிற்பேட்டை திட்டங்களும் சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
எங்கள் தொழில் அமைப்பில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தொழில்முனைவோர் உறுப்பினர்களாக உள்ளனர். முதல்கட்டமாக 36 உறுப்பினர்கள் இணைந்து கீரணத்தம் பகுதியில் 2.19 ஏக்கரில் ‘காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்’ என்ற பெயரில் குறுந் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தின் மதிப்பு ரூ.12 கோடி.
இதுபோன்ற தொழிற்பேட்டை திட்டங்களுக்கு ‘சிட்கோ’ மூலம் நிதியுதவி பெற குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலப்பரப்பு, 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. தமிழக குறுந் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் எங்கள் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று, நிபந்தனையை 2 ஏக்கராக குறைத்து அரசு உத்தரவிட்டது. இருப்பினும் தொழிற்பேட்டை வளாகத்தில் சாலை, தண்ணீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள தேவைப்படும் தொகையில் 100 சதவீதம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
கோவை மாவட்டத்தின் மற்ற இடங்களிலும் இதே போன்று அரசு உதவியுடன் குறுந் தொழிற்பேட்டைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். நகர் பகுதிக்குள் வாடகை கட்டிடங்களில் செயல்படும் குறுந் தொழில் நிறுவனத்தினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.