

ஓசூர்: உள்ளூர் சந்தை மற்றும் பெங்களூரு பகுதியில் நாட்டுக் கோழி இறைச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், சார்பு தொழிலாகக் கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, நாட்டுக் கோழி களையும் வீட்டில் வளர்த்து வருகின்றனர். தற்போது, நாட்டுக் கோழிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக கரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் பொதுமக்கள் அதிக அளவில் நாட்டுக் கோழி இறைச்சிகளை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயிகள் நாட்டுக் கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ நாட்டுக் கோழி இறைச்சி ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆட்டு இறைச்சிக்கு இணையாக நாட்டுக் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் பெங்களூரு நகரப் பகுதிக்கு அதிக அளவில் நாட்டுக் கோழிகளை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். நாட்டுக் கோழிகள் வளர்க்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வங்கிக் கடன் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டாலும், கிராமப் பகுதி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: கறிக்கோழி இறைச்சியை விட நாட்டுக் கோழி இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்பட்டுள்ளதால், நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், கிராம விவசாயிகள் நாட்டுக் கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிலருக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு முறை தெரியாததால், கோடை கால நோய்களால் கோழிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. எனவே, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாட்டுக் கோழி வளர்ப்பு முறை மற்றும் நோய்த் தடுப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.