அந்நிய நிறுவன முதலீடு அதிகரிப்பு

அந்நிய நிறுவன முதலீடு அதிகரிப்பு
Updated on
1 min read

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மூன்று மாதங்களில் 1,000 கோடி டாலரைத் தொட்டுள்ளது. மத்தியில் நிலையான அரசு அமையும் என்றும், அந்த அரசு புதிய சீர்திருத்தங்களை அதிலும் குறிப்பாக வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் முதலீடு அதிகரித்துள்ளது.

அந்நிய நிறுவன முதலீடு (எப்ஐஐ) இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 1000 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இது 20 ஆயிரம் கோடி டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) அளித்த தகவலின்படி இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 500 கோடி டாலர் (ரூ. 30 ஆயிரம் கோடி) முதலீடு வந்துள்ளதாகத் தெரிகிறது. கடன் சந்தையில் இதே அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ. 60 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் மொத்த முதலீடு ரூ. 1,500 கோடியாகும். கடன் சந்தையிலிருந்து வெளியேறிய தொகை ரூ. 7,000 கோடி. பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை ரூ. 8,500 கோடி. மத்தியில் ஸ்திரமான அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் பங்குச் சந்தை குறியீட்டெண் 7 சதவீதம் அதிகரித்து 23 ஆயிரம் இலக்கை நெருங்கியுள்ளது.

மார்ச் மாதத்தில் எப்ஐஐ மேற்கொண்ட முதலீடு ரூ. 20,077 கோடி. ஜனவரி மாதத்தில் ரூ. 714 கோடியும், பிப்ரவரி மாதத்தில் ரூ. 1,404 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஐ-க்களின் எண்ணிக்கை 1,700 ஆகும். இவற்றுடன் துணை கணக்குகளாக 6,400 கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதால் மொத்த முதலீட்டுத் தொகை 19,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in