Published : 23 Apr 2023 12:35 PM
Last Updated : 23 Apr 2023 12:35 PM
கோவை: பல ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை இவ்வாண்டு இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் கோவை மாநகரில் மட்டும் 60 கிலோ எடை கொண்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளை முன்னிட்டு நகைக் கடைகளில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும். இவ்வாண்டு இரண்டு நாட்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுவதாகவும், வியாபாரம் சிறப்பாக உள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட் ராம் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாண்டு நேற்று, இன்று என இரண்டு நாட்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
விலை அதிகரிப்பு காரணமாக மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான தங்க நகைகளை வாங்கவே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். வளையல், பிரேஸ்லெட், தோடு, தொங்கல் உள்ளிட்ட நகைகள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவை மாநகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ. 36 கோடி மதிப்பிலான 60 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்றும் விற்பனை சிறப்பாக இருக்கும் என்பதால் மொத்த விற்பனை 100 கிலோவுக்கு அதிகமாக இவ்வாண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆர்எஸ்புரத்தை சேர்ந்த வாடிக்கையாளர் சுபா கூறும்போது, ‘‘தங்கத்தில் முதலீடு செய்வது என்றும் பயன் தரும். தங்கம், சிறந்த முதலீடாகவே காலம் காலமாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவதால் தங்க நகை சேமிப்புக்கு வழிவகை செய்வதாகவே இந்நாளை நான் கருதுகிறேன்.
எனது பொருளாதார நிலைக்கு ஏற்ப மூக்குத்தி உள்ளிட்ட அரை கிராம், ஒரு கிராம் தங்க நகைகளை வாங்கி உள்ளேன். விலை அதிகம் என்ற போதும் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது,’’ என்றார்.
பேரூர், பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த பொன்மலர் கூறுகையில், ‘‘அட்சய திருதியை தினத்தில் விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த நடைமுறையை நான் பின்பற்றி வருகிறேன். முன்பு 3 அல்லது 4 சவரன் வாங்கி வந்த நிலையில் தற்போது விலை உயர்வு காரணமாக ஒரு சவரன் மட்டுமே நகை வாங்க முடிகிறது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT