Published : 23 Apr 2023 02:27 PM
Last Updated : 23 Apr 2023 02:27 PM
கோவை: தொழிலாளர்களின் பணி நேர சட்டத்தை திருத்தி அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு தென்னிந்திய நூற்பாலை அதிபர்கள் சங்கம் (சிஸ்பா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ‘சிஸ்பா’ தொழில் அமைப்பின் தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தொழிலாளர்களின் பணி நேர சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகளுடன் தொழிலாளர்களின் நலன் பாதிக்காத வகையில் தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே நடைமுறைப் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் 48 மணி நேரம் பணி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தாது. எந்த நிறுவனம் அல்லது தொழிற்சாலை விரும்புகிறதோ அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதா அமலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் உற்பத்தியும், வேலை வாய்ப்பும் பெருகும். கிராமப்புற பெண்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பு உருவாகும்.
இந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT