Published : 23 Apr 2023 04:00 AM
Last Updated : 23 Apr 2023 04:00 AM

தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் களை கட்டியது அட்சய திருதியை விற்பனை

சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் நேற்று விற்பனை களைகட்டியது. மேலும், தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்ததால், நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று காலை 7.49 மணிக்குத் தொடங்கி, இன்று (ஏப். 23) காலை 7.47 மணிவரை நீடிக்கிறது. இதையடுத்து, நகை வியாபாரிகள் நேற்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்கினர்.

சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, புரசைவாக்கம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உள்ள நகைக் கடைகள் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. காலை முதலே பொதுமக்களும் தங்க நகைகளை வாங்க கடைகளில் திரண்டதால், பல கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால், பல கடைகளில் சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு, நகைகள் விற்பனை செய்யப்பட்டன.

அட்சய திருதியையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்தன. சில கடைகளில் பவுனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது. மேலும் பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும், நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் ஆகியவை புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதேபோல, வைரம், பிளாட்டினம் நகைகளையும் சிலர் வாங்கினர். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கும் விற்பனையானது.

24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.48,472-க்கு விற்பனையானது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,400-க்கும் விற்பனையானது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் விலை குறைந்ததால், நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், தமிழம் முழுவதும் நேற்று விற்பனை களைகட்டியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x