Published : 08 Sep 2017 09:10 AM
Last Updated : 08 Sep 2017 09:10 AM

உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவேண்டும்: தனியார் நிறுவனங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி பிரிவில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) நடத்தும் `புட்புரோ 2017’ கண்காட்சி (செப்7&8) சென்னையில் நந்தம்பாக்கதில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த கண்காட்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் `புட்ப்ரோ 2017’ கண்காட்சி தலைவரும் கெவின்கேர் நிறுவனத்தின் தலைவருமான சி.கே ரங்கநாதன், தமிழக அரசு வேளாண் துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ஜப்பான் தூதரக அதிகாரி செஜி பாபா மற்றும் இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் சிட்டிடோர்ன் கோங்க்சாக்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: மிகச் சரியான நேரத்தில் இந்த `புட் புரோ 2017’ கண்காட்சி தொடங்கியிருக்கிறது. உணவு பதப்படுத்துதல் துறை நிறுவனங்கள், விவசாயம் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணைக்கும் துறையாகும். உணவு பதப்படுத்துதல் துறை நல்ல வளர்ச்சி பெற்று வரும் துறை. விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை இந்த துறை மூலம் ஏற்படுத்த முடியும். உணவு பதப்படுத்துதல் துறை மிக முக்கியமான துறை. ஏனெனில் இந்த துறை மூலம் உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க முடியும். கிட்டத்தட்ட மொத்த காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் 35% வீணாகிறது. இதை தடுக்கவேண்டுமென்றால் பதப்படுத்துதல் மிக மிக அவசியம். நிறுவனங்களும் விவசாயிகளும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் இந்த துறை நன்கு வளரமுடியும். உணவுபதப்படுத்துதல் துறைக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்துவருகிறது. உணவு பாதுகாப்பை உணவு பதப்படுத்துதல் துறை மூலம் உறுதி செய்யப்படும். தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் கூறியதாவது: நாளுக்கு நாள் சமைப்பதே குறைந்து கொண்டே வருகிறது. ஏனெனில் நகர்ப்புற குடும்பங்களில் வேலைகளுக்குச் செல்ல இருப்பதால் அனைவரும் உடனடியாக தயாரிக்கக் கூடிய உணவுகளை வாங்க தொடங்கியுள்ளனர். அதனால் உணவு பதப்படுத்துதல் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இளம் தொழில்முனைவோர்கள் இந்த துறையில் இறங்க வேண்டும். அரசின் உதவியும் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x