

ஹைதராபாத்: கரோனா பரவல் காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறை நிறுவனத்தின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தன.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் வாரத்துக்கு 3 நாட்கள் பணியாளர்கள் அலுவலகம் வந்து வேலைபார்ப்பதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளன. ஏற்கெனவே, 60% பணியாளர்கள் வாரத்துக்கு குறைந்தபட்சம் 2 நாள் அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் நிலையில், நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
இதுகுறித்து ஹைதராபாத் சாப்ட்வேர் எண்டர்பிரைசஸ் அசோசியேஷன் தலைவர் மணிஷா சபூ கூறியதாவது. பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்து வந்து வேலைபார்க்க வைப்பதில் நிறுவனங்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன்-ஜூலைக்குள் 70 முதல் 80 சதவீத பணியாளர்களை அலுவலகம் வரவழைக்கும் நடவடிக்கையில் அவை இறங்கியுள்ளன.
கண்டுபிடிப்பு, குழுப்பணி, ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடை வெளியை நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே நிறுவனங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. பெரிய நிறுவனங்களை விட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ஏற்கெனவே 60% பணியாளர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றத் தொடங்கிவிட்டனர்.
இருப்பினும் அலுவலக நடைமுறைக்கு மாறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பணியாளர்களில் 39% பேர் வீட்டில் இருந்து பணிபுரிவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும், 35% பேர் அலுவலகத்தை விட்டு வெகுதொலைவில் இருப்பதாக கூறியுள்ளனர். பணியாளர்களில் 34% பேர் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதாகவும், 32% பேர் வீட்டில் இருந்து வேலைபார்ப்பதால் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு விலகுவது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மணிஷா சபூ கூறினார்.