

புதுடெல்லி: உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் தொழிலதிபர்களை கண்டறிந்து போர்ப்ஸ் பட்டியல் வகைப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆசியாவைச் சேர்ந்த 30 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜிப்ரான் குல்சார் போர்ப்ஸ் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இப்பிராந்தியத்திலிருந்து போர்ப்ஸ் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் நபர் என்ற பெருமையை ஜிப்ரான் பெற்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மோசமான இணைய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஜிப்ரான் போர்ப்ஸ் சாதனை பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதானது அவரது தொலைநோக்கு, அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள இளம் தொழில்முனைவோருக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக மாறியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.