Published : 21 Apr 2023 04:10 AM
Last Updated : 21 Apr 2023 04:10 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக, வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையை விவசாயி ஒருவர் அரசு மானிய திட்டம் மூலம் நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளார்.
தருமபுரி அடுத்த கடகத்தூர் அருகே முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி. இவர், அதே பகுதியில் வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலை நடத்தி வருகிறார். வெல்லம் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளராகவும் உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் அவருக்கு ஆள் பற்றாக்குறை பிரச்சினை பெரிய சவாலாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஆலைக்குத் தேவையான கரும்பு வாங்கி வர கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதிக்கு சென்றபோது அங்குள்ள கரும்பு ஆலைகள் நவீன தொழில் நுட்பத்துக்கு மாறியிருப்பதையும், ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வாக இருப்பதையும் கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து, தனது ஆலையையும் இவ்வாறு மேம்படுத்த திட்டமிட்ட சின்னசாமி அரசு அதிகாரிகளை அணுகினார்.
அதன் தொடர்ச்சியாக அவருக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் 35 சதவீதம் மானிய திட்டத்தில் ஆலையை நவீன நுட்பத்தில் மேம்படுத்திட அதிகாரிகள் வழிகாட்டுதல் வழங்கினர். கடந்த சில மாதங்களாக இதற்கான கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட சின்னசாமி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆலையை நவீன மயமாக்கி தற்போது இயக்கத்தையும் தொடங்கி விட்டார்.
இது குறித்து சின்னசாமி கூறியது: ஆலையில் வெல்லம் காய்ச்சும் அடுப்பில் எரியூட்ட தேவையான கோது(பால் பிழிந்த பிறகு மிஞ்சும் கரும்புச் சக்கை) உலர வைப்பது, அதை சேகரித்து பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அதிக ஆட்கள் தேவை. மேலும், இது அதிக உழைப்பை கொடுக்க வேண்டிய பணியாகவும் உள்ளது.
இதுதவிர, மழைக்காலம் போன்ற நேரங்களில் கோதில் உள்ள ஈரத்தை முழுமையாக உலரவைத்து சேகரிப்பது சவாலான செயல். இதுபோன்ற காரணங்களாலும், ஆள் பற்றாக்குறை காரணங்களாலும் தவித்து வந்தோம். இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நவீன தொழில் நுட்ப கட்டமைப்பு அமைந்துள்ளது. இதில், ‘ட்ரையர்’ தான் பிரதானம்.
பால் எடுக்க கிரஷரில் கரும்பை அரைத்த உடனே வெளியேறும் சக்கையை ட்ரையருக்குள் அனுப்பி சில நிமிடங்களுக்கு பின் வெளியேற்றும் போது நன்றாக உலர்ந்து விடுகிறது. இதை உடனே அடுப்பை எரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். மிஞ்சும் சக்கையை பாதுகாக்கவும் முடியும். இதன் மூலம் அதிக ஆட்கள் தேவை குறைந்துள்ளது.
மின் தேவையை, மின்சாரத்தின் கட்டணமும் தான் அதிகமாக உள்ளது. வெல்லம் தயாரிக்கும் ஆலைத் தொழிலை காக்கும் வகையில் மின் கட்டணத்தில் அரசு சலுகை அளித்தால் பேருதவியாக இருக்கும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT