

சென்னை: சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நடைபெற்ற கடன் தொடர்பு திட்ட நிகழ்ச்சியில், 2.27 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.3,570 கோடி கடன் திட்டங்களுக்கான அனுமதி கடிதங்களை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராட் வழங்கினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் மற்றும் கடன் தொடர்பு திட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிரதமரின் ஸ்வா நிதி, முத்ரா கடன், சுயஉதவி குழுக்கள், ஸ்டாண்ட்-அப் இந்தியா, பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், எம்எஸ்எம்இ, விவசாயம் ஆகியபிரிவுகளில் 2.27 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.3,570 கோடி கடன் திட்டங்களுக்கான அனுமதி கடிதங்களை அமைச்சர் கராட் வழங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 5 ஏடிஎம் மையங்கள், பரோடா வங்கியின் 2 டிஜிட்டல் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் சேவை கிளைகளை மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்.
மேலும், சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகள் அடங்கியகண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர், மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநரும், மாநில அளவிலான வங்கியாளர் குழுமத்தின் தலைவருமான எஸ்.ஸ்ரீமதி, இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர்மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்திலால் ஜெயின், தமிழக நிதித் துறை செயலர் (செலவினம்) வி.அருண் ராய், இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி, பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா மற்றும் பல்வேறு வங்கிகள் மற்றும் தமிழக அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.