அதானி விவகாரம் | தொழில் நிறுவனங்களிடம் இருந்து அரசு விலகியே இருக்கிறது: நிர்மலா சீதாராமன்

அதானி விவகாரம் | தொழில் நிறுவனங்களிடம் இருந்து அரசு விலகியே இருக்கிறது: நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

வாஷிங்டன்: தொழில் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு விலகியே இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதானி விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''தொழில் நிறுவனங்களிடம் இருந்து அரசு விலகியே இருக்கிறது. அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணையில் இந்த விவகாரம் இருப்பதால் இது குறித்து பொதுவெளியில் கூறுவது பொருத்தமாக இருக்காது'' என்று தெரிவித்தார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்து வருகிறது. அதுமட்டுமல்ல, தனியார் துறையிலும் திறன்சார் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருகிறார்கள்'' என்றார்.

தனியார்மயமாக்கம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து அரசு செயல்படுகிறது. அரசு நிறுவனங்களின் பங்குகள் மெதுவாகவே முன்னேற்றம் காண்கின்றன. அதற்காக அத்தகைய நிறுவனங்களை மூடிவிட முடியாது. இதைக் கருத்தில் கொண்டே, அதிக பங்கு மதிப்புக்கு சாத்தியமில்லாத தொழில்களில் இருந்து வெளியேற அரசு விரும்புகிறது. தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து நடைபெற்றால்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். எனவே, இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in