கொள்முதல் விலை உயர்வு - பருத்தி பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் அரூர் விவசாயிகள்
அரூர்: பருத்தி கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் அரூர் மற்றும் சுற்றுப் பகுதி விவசாயிகள் மீண்டும் பருத்தி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர், கம்பை நல்லூர், கடத்தூர், பொம்மிடி, தீர்த்தமலை, தென் கரைக்கோட்டை, ராமியம் பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்கள் பருத்தி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளன. இதனால் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தரமற்ற விதை காரணமாகவும், நோய் தாக்குதல், அதிகமழை போன்ற வற்றாலும் போதிய விளைச்சல் கிடைக்க வில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்தனர். அதன் காரணமாக பல விவசாயிகள் பருத்தி பயிரிடுவதில் இருந்து விலகி இருந்தனர். தற்போது மத்திய அரசு பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டால் ரூ.6,200 நிர்ணயம் செய்துள்ளது.
அதேநேரம், வெளிமார்க்கெட்டில் ஒரு குவின்டால் பருத்தி ரூ.9,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பருத்தி சாகுபடி மீண்டும் லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. இதையடுத்து அரூர் மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடியில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். மரவள்ளிக் கிழங்கு சீசன் முடிவுற்ற நிலையில் நிலங்களை பண்படுத்தி தற்போது பருத்தி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
