Published : 16 Apr 2023 04:20 AM
Last Updated : 16 Apr 2023 04:20 AM

சேலம் அருகே மலர் சாகுபடி நிறைந்த கிராமங்களில் பயிரிடும் பரப்பை குறைத்துக் கொண்டே வரும் விவசாயிகள்

சேலத்தை அடுத்த வீராணம் அருகே தைலானூர் கிராமத்தில் பயிரிட்டுள்ள கனகாம்பரம் தோட்டத்தில் மலர்களை பறிக்கும் விவசாயிகள். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலம் அருகே மலர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் கிராமங்களில், விவசாய கூலித் தொழிலாளர் பற்றாக்குறையால், மலர் பயிரிடும் பரப்பை விவசாயிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகின்றனர்.

சேலத்தை அடுத்த வீராணம் தொடங்கி மேட்டுப்பட்டி தாதனூர், பள்ளிப்பட்டி, தைலானூர், தெலுங்கானூர், பெரிய வீராணம், வலசையூர் உள்ளிட்ட கிராமங்களில், விவசாயிகள் பரவலாக மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கனகாம்பரம், மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

மலர் சாகுபடியில் சிறந்து விளங்கிய கிராமங்களில், தற்போது மலர் பயிரிடும் பரப்பை விவசாயிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியது: சேலத்தில், மிகப்பெரிய அளவில் வஉசி பூ மார்க்கெட் உள்ளதால், தினந்தோறும் பறிக்கப்படும் பூக்களை, விரைவாக சேலத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கான வாய்ப்புள்ளது.

எனவே, வீராணம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பலரும், மலர் சாகுபடியை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, தங்கள் விளை நிலத்தின் ஒரு பகுதியிலாவது, மலர் சாகுபடி செய்வது பெரும்பாலானவர்களுக்கு வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், விவசாயத்துக்கான தொழிலாளர்கள் கிடைப்பது, நாளுக்கு நாள் அரிதாகி வருகிறது. மலர் சாகுபடியில், பூக்களை தினமும் காலையில் பறித்து, உடனே மார்க்கெட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை உள்ளது.

ஆனால், போதுமான எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காதபோது, மலர்களை பறிக்காமல் செடியிலேயே விட வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இல்லாவிடில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து, மலர்களை பறித்தால் மட்டுமே, சாத்தியமாகும். இந்த சூழ்நிலை எல்லோருக்கும் சாதகமாக இருப்பதில்லை.

100 நாள் வேலை உறுதித் திட்டத்தில், பலருக்கும் எளிதாக வேலை கிடைத்துவருகிறது. அலுவலக பணிக்கு செல்வது போல, பலரும் பணிக்குச் சென்றுவிட்டு, கடின உழைப்பு தேவைப்படாத நிலையிலும், அவர்களுக்கு தினமும் கூலி கிடைத்துவிடுகிறது. ஆனால், விவசாயத் தொழிலுக்கு தினமும் அதிகாலையில் வர வேண்டும். வேலையை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இதனால், விவசாய கூலி வேலைக்கு வருவதற்கு, பலரும் விரும்புவதில்லை.

கனகாம்பரம் மலர்ச்செடியை, ஒரு ஏக்கர் வரை பயிரிட்டு வந்த பலரும், தற்போது சென்ட் கணக்கில் தான் சாகுபடியை செய்துள்ளனர். நீர் ஆதாரம் இருந்தும், கனகாம்பரத்துக்கு தற்போது அதிக விலை கிடைத்தும், அதனை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது. 1 கிலோ மலர் பறித்தால் ரூ.100 கூலி வழங்கப்படுகிறது. ஆனால், 3 மணி நேரம் பணியாற்றினால் தான் ஒரு கிலோ கனகாம்பரம் பறிக்க முடியும்.

எனவே, இந்த வேலைக்கு வருவதை பலரும் விரும்புவதில்லை. இதனால், விவசாயிகள் பலரும், விவசாயத் தொழிலாளர்களை நம்பி இருக்காமல், தங்களால் எந்த அளவு மலர் பறிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே சாகுபடியை மேற்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட, தற்போது 4-ல் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே மலர் சாகுபடி பரப்பு உள்ளது. புதிதாக, விவசாயத்துக்கு எவரும் வராததால், அடுத்தடுத்த ஆண்டுகளில், மலர் சாகுபடி கேள்விக்குறியாகிவிடும் நிலை காணப்படுகிறது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x