

மும்பை: இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் பேசஞ்சர் வாகனங்களின் விலையை வரும் மே 1 முதல் உயர்த்த உள்ளது.
கடந்த 1945-ல் நிறுவப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சொகுசு கார்கள், கமர்சியல் வாகனங்கள், பிக்அப் ட்ரக்குகள், பேசஞ்சர் வாகனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் பேசஞ்சர் வாகன பிரிவில் விலையேற்றம் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள விலையில் சராசரியாக 0.6 சதவீதம் வரை வாகனத்தின் விலையில் ஏற்றம் இருக்கும் என தெரிகிறது.
அதிகரித்துவரும் உற்பத்திச் செலவு காரணமாக இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் மாடல் மற்றும் வேரியண்டைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி, ஹூண்டாய், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் வாகன விலையை உயர்த்திய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ், பன்ச், சாஃபாரி, ஹேரியர், நெக்ஸான் என பல மாடல் கார்களை டாடா விற்பனை செய்து வருகிறது. மே 1ம் தேதி முதல், விலை உயர்வு அமலுக்கு வர உள்ள நிலையில், தங்கள் நிறுவனத்தின் அனைத்து பயணிகள் வாகன பிரிவு வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.