

கோவை: கோவை தொழில்துறையினர் வர்த்தக தொடர்பை வளர்த்துக்கொள்ள ஜப்பான் நாட்டுக்கு வர வேண்டும் என அந்நாட்டு துணைத் தூதர் தாகா மசாயூகி தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் கோவை மற்றும் ஜப்பான் நாட்டுக்கு இடையே தொழில் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாகா மசாயூகி பேசியதாவது: இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு அதிக முதலீடு இல்லை.
ஆனால், ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்து வருகின்றன. 1,439 ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 191 நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், இது வர்த்தக மதிப்பீட்டில் மிக குறைவுதான்.
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்கள்தான் ஜப்பானியர்களுக்கு அதிகமாக தெரிந்த நகரங்களாக உள்ளன. கோவை அந்த அளவுக்கு தெரியவில்லை. எனவே, கோவையில் உள்ள தொழிலதிபர்கள் ஜப்பான் நாட்டுக்கு வந்து இங்குள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து பேச வேண்டும். அங்குள்ள தொழிலதிபர்களும் பொதுமக்களும் கோவைக்கு வரும்போதுதான் வர்த்தகம் மேம்படும். இவ்வாறு அவர் பேசினார்.