

சென்னை: எரிபொருள் செலவைக் குறைக்கும் நோக்கில், சிஎன்ஜி வாயுவால் ஓடும் வாகனங்களை வாங்க வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டுவதால், சிஎன்ஜி எரிவாயு விற்பனை அதிகரித்துள்ளது
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்க, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனத்தையும், இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களையும் பயன்படுத்துமாறு மத்திய அரசு, மாநிலங்களை அறிவுறுத்தி வருகிறது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையை அடுத்த எண்ணூரில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையத்தை அமைத்துள்ளது.
அந்த முனையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக திரவ நிலை எரிவாயு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு என்ற பெயரிலும், வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் பிஎன்ஜி என்ற பெயரிலும் விநியோகம் செய்யப்படுகிறது.திரவ நிலை எரிவாயு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது என்பதுடன், எளிதில் தீப் பிடிக்காத தன்மை கொண்டது.
தமிழகத்தில் 2,825 சிஎன்ஜி மையங்கள் மூலமாக வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய 8 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சேலம், மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தருமபுரி,கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
டோரன்ட் காஸ் நிறுவனத்துக்கு சென்னை, திருவள்ளூர், நாகை மாவட்டங்களும், ஏ.ஜி. அண்ட் பி நிறுவனத்துக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோல, அதானி காஸ், மெகா காஸ், ஐஆர்எம் எனர்ஜி நிறுவனங்களுக்கும் பல்வேறு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் செலவுடன் ஒப்பிடுகையில் இயற்கை எரிவாயு செலவு 30 சதவீதம் குறைவாகும்.
இதனால், சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 183 சிஎன்ஜி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் தினமும் சராசரியாக 1.10 லட்சம் கிலோ சிஎன்ஜி எரிவாயு விற்பனை செய்யப்படுகிறது. இதில், சென்னையில் மட்டும் 55 ஆயிரம் கிலோ விற்பனை ஆகிறது. இந்த விற்பனை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.