Published : 13 Apr 2023 06:40 AM
Last Updated : 13 Apr 2023 06:40 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டமாக ‘மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்- 2023' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் திட்டமாகும். அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம். ஒருவர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம்.
ஒரு கணக்கு தொடங்கி 3 மாதங்கள் ஆன பின்னர், அடுத்த கணக்கினை தொடங்கலாம். இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்ச தொகை ரூ.1,000 முதல் அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். முதலீட்டுக்கு 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி வழங்கப்படும். சேமிப்பு பணத்தில் இருந்து ஓராண்டுக்கு பின்
40 சதவீதம் பணம் எடுக்கும் வசதி உண்டு. கணக்கு தொடங்கி 6 மாதங்களுக்கு பிறகு முன் முதிர்வு செய்தால், குறைக்கப்பட்ட வட்டி 5.5 சதவீதம் கிடைக்கும். கணக்குதாரர் இறந்தாலோ அல்லது பாதுகாவலர் இறந்தாலோ அல்லது கணக்குதாரர் கடும் நோய்வாய் பட்டாலோ உரிய ஆவணங்களை சமர்பித்து முன் முதிர்வு செய்ய முடியும். வட்டி 7.5 சதவீதம் வழங்கப்படும். இத்திட்டம் 31.03.2025 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT