Published : 26 Sep 2017 10:23 AM
Last Updated : 26 Sep 2017 10:23 AM

தொழில் முன்னோடிகள்: ஜெஃப் பிஸோஸ் (1964)

அண்மையில் வெளியான பட்டியலின்படி, அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெஃப் பிஸோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். இதுவரை முதலிடத்தில் இருந்த பில் கேட்ஸ், வாரன் பஃபெட் ஆகிய இருவரையும் பின் தள்ளியுள்ளார். ராக்கெட் வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இணைய தள வியாபாரத்தின் (இ- காமர்ஸ்) தனிக்காட்டு ராஜா இவர்தான்.

அமெரிக்காவின் அல்புக்கர்க் நகரத்தில் டெட் ஜார்கென்சன் என்பவர் ஒற்றைச் சக்கர விளையாட்டில் ஹீரோ. இவர் சாகசங்கள் ஜாக்லீன் என்னும் பதினாறு வயதுப் பெண்ணை ஈர்த்தன. விட்டில் பூச்சியாக விழுந்தாள். அவள் வயிற்றில் டெட் வாரிசு. திருமணம் நடந்தது. ஏழே மாதங்களில், ஜனவரி 12, 1964 - இல் மகன் பிறந்தான். ஜெஃப்ரி ப்ரெஸ்ட்டன் ஜார்கென்சன் என்று பெயர் வைத்தார்கள்.

புதுத் தம்பதிகள் தனிக் குடித்தனம் போனார்கள். டெட் குடும்பப் பொறுப்பை உணரவேயில்லை. மொத்த வருமானமும் மதுக்கடைகளுக்கு அர்ப்பணம், நண்பர்களோடு நள்ளிரவு வரை ஊர் சுற்றல், வம்பளப்பு. போதையில் வீட்டுக்கு வருவார்.

கணவன் உருப்படப் போவதில்லை என்று ஜாக்லீன் புரிந்துகொண்டார். குழந்தையை எடுத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போனார். மகனுடைய பதினேழாம் மாதத்தில், விவாகரத்து கேட்டு வழக்குப் போட்டார். ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே, மிகேல் ஏஞ்சல் பீஸோஸ் பெரஸ் என்னும் இளைஞரைச் சந்தித்தார். நட்போடு பழகத் தொடங்கினார்கள்.

ஜாக்லீன் திருமணம் முறிந்தது. மிகேலுக்கு எக்ஸான் என்னும் பெட்ரோலியக் கம்பெனியில் ஹூஸ்டன் நகரத்தில் இன்ஜினீயர் வேலை கிடைத்தது. ஜாக்லீனிடம் ஐ லவ் யூ சொன்னார். கல்யாணம் செய்துகொண்டார்கள். மிகேல், ஜாக்லீன், ஜெஃப் மூவரும் ஹூஸ்டன் போனார்கள். மகன் பெயரை ஜெஃப் பிஸோஸ் என்று மாற்றினார்கள். மிகேல் தான் தன் அப்பா என்று ஜெஃப் நினைத்தான். அவன் பத்தாம் வயதில் பிறப்பு ரகசியத்தைச் சொன்னார்கள். வயதை மிஞ்சிய பக்குவத்தோடு, ஜெஃப் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டான்.

ஜெஃப் படிப்பில் கில்லாடி. அறிவியல் பரிசோதனைகள் செய்வதில் மிகுந்த விருப்பம். அவன் அம்மா வழித் தாத்தா அணுமின்நிலையத்தில் பணியாற்றியவர். நான்காம் வயது முதல், ஒவ்வொரு கோடை விடுமுறையையும் ஜெஃப் தாத்தாவோடு செலவிடுவான். காற்றாலை இயந்திர ரிப்பேர், கிரேனை பிரித்துப்போட்டு ஒருங்கிணைத்தல், ரோடு போடுதல் தொடங்கி, காளை மாடுகளுக்குக் காயடிப்பது வரை அத்தனையையும் தாத்தா பேரனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஜெஃபோடு செக்கர்ஸ் என்னும் செஸ் போன்ற ஆட்டம் விளையாடுவார். சிறுவனுக்காக விட்டுக்கொடுக்கவே மாட்டார். வெற்றி தானாகக் கிடைக்காது; தன் முயற்சியால், சொந்த உழைப்பால், முட்டி முட்டி மோதி வரும் மன உறுதியால் மட்டுமே கிடைக்கும் என்னும் பேருண்மையை இதன் மூலம் பொடியன் மனதில் பதியவைத்தார்.

தாத்தாவுக்கு ராக்கெட்கள், விண்கலங்கள் ஆகியவை மீது ஏகப்பட்ட ஆர்வம். இந்த ஆர்வத்தைப் பேரன் மனதிலும் தொற்ற வைத்தார். ஏப்ரல் 21, 1969. மனித வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள். அப்பல்லோ 11 என்னும் அமெரிக்க விண்கலத்தில் பயணம் செய்த நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் காலெடுத்து வைத்தார். மாற்றுக் கிரகத்தில் மனிதன் பதித்த முதல் அடையாளம். மனிதகுலத்தின் இந்தச் சாதனைத் தருணத்தைத் தாத்தா, ஐந்து வயதுப் பேரனைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தார். மனிதர்கள் விண்வெளிக்குப் பயணம் போவது விரைவில் சாத்தியமாகப் போகிறது என்னும் ஈடுபாட்டையும், நம்பிக்கையையும், ஜெஃப் மனதில் ஆழமாகப் பதியவைத்தார்.

விண்வெளி ஆர்வம்

 

அடுத்த கட்டமாக, ஜெஃபின் பதின்ம வயதுகளிலேயே, ஜூல்ஸ் வெர்ன், ராபர்ட் ஹென்லின், ஐஸக் அஸிமோவ் ஆகிய அறிவியல் புதின எழுத்தாள ஜாம்பவான்களின் படைப்புகளை அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

ஜெஃப் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே, பள்ளியில் இருந்த கம்ப்யூட்டரில் புரோக்ராம் செய்யக் கற்றுக்கொண்டான். பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டரோடு செலவிட்டான். அறிவியல் பரிசோதனைகளையும் தொடர்ந்தான். உதிரிபாகங்களை வாங்கி, அவன் தயாரித்த கருவிகள் - அலாரம், சூரியசக்தியில் இயங்கும் குக்கர், பொம்மை விமானங்கள், சின்ன ரோபோக்கள், இத்தியாதி, இத்தியாதி.

பிசினஸ் புத்தி ஜெஃப் ரத்தத்தில் ஊறியிருந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் விளையாட்டு, வெட்டிப் பேச்சு, நண்பர்களோடு ஊர் சுற்றல் ஆகியவற்றில் நேரத்தை ‘வீணாக்க’ அவனுக்குப் பிடிக்காது. மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை பார்த்தான். ஒரு கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு அறிவியல் பயிற்சி தரும் முகாம் நடத்தினான். கட்டணம் 150 டாலர்கள். பெரிய தொகை. ஆனாலும், பல சிறுவர் சிறுமியர் வந்தார்கள்.

பள்ளிப் படிப்பை முடித்த பல மாணவர்களை மியாமி ஹெரால்ட் என்னும் லோக்கல் நாளிதழ் பேட்டி கண்டார்கள். அவர்கள் எல்லோரிடமும் ஒரே கேள்வி, “வாழ்க்கையில் உங்கள் லட்சியம் என்ன?”

ஜெஃப் சொன்ன பதில், ‘20 முதல் 30 லட்சம் மனிதர்களை விண்ணில் குடியேற்றுவேன். அதற்காக, அங்கே, ஹோட்டல்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், வீடுகள் கட்டுவேன்.”

1982. ஜெஃப், புகழ் பெற்ற பிரின்ஸ்ட்டன் பல்கலைக் கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இரண்டிலும் இளங்கலைப் பட்ட வகுப்புகளில் சேர்ந்தான். படிப்பை முடித்ததும், இன்டெல், பெல் லேபாரட்டரீஸ், ஆண்டர்சன் கன்சல்ட்டிங் ஆகியோர் ஜெஃபுக்கு சிகப்புக் கம்பளம் விரித்தார்கள். ஃபிட்டெல் என்னும் ஸ்டார்ட்அப் கம்பெனியில் சேர்ந்தார். அங்கேதான், கட்டுப்பாடுகள் இல்லாமல், புதுமைகளை முயற்சிக்கலாம். வேக வேகமாக, கார்ப்பரேட் ஏணியில் மேலே போகலாம் என்னும் தன்னம்பிக்கை. ஒரே வருடம். திறமை, கடும் உழைப்பு. மற்றும் பிசினஸ் வளர்ச்சித் துறை டைரக்டராக பதவி உயர்வு.

1988 - இல் ஃபிட்டெல் கம்பெனியை ஒரு ஜப்பானிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். ஜெஃப் வேலையை விட்டார்.

அமெரிக்க வங்கிகள் இணைந்து, பேங்கர்ஸ் டிரஸ்ட் கம்பெனி (Bankers Trust Company) என்னும் அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். இதில், பன்னாட்டுப் பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல் தொடர்பை நிர்வகிக்கும் உதவி துணைத் தலைவர் பதவியில் சேர்ந்தார். ஒரே வருடத்தில், 26 வயதில், துணைத் தலைவராக பதவி உயர்வு.

புதியவரின் புயல்வேக வளர்ச்சியை அந்த அமைப்பில் இருந்த, பழம் தின்று கொட்டை போட்டவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பல அரசியல் விளையாட்டுகளில் இறங்கினார்கள். வெறுத்துப் போன ஜெஃப் வேலையை விட்டார். டிஈஷா என்னும் நிதி ஆலோசனை நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஷாவுக்கும், இரவு பகல் பாராமல் உழைத்த ஜெஃபுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இரண்டே வருடங்களில் துணைத் தலைவர் பதவி. வயது 28. ஷா நிறுவனத்தில் இத்தனை குறைந்த வயதில், இத்தனை உச்சாணிப் பதவி வகித்தவர் ஜெஃப் மட்டுமே.

இ-காமர்ஸ் எதிர்காலம்

இந்த காலகட்டத்தில் ஜெஃப் இன்டர்நெட் பற்றிப் படிக்கத் தொடங்கினார். அசந்துபோனார். கடந்த சில வருடங்களில், இணையதளம் மூலமாக அனுப்பப்படும் ‘தகவல்கள்’ 2,300 மடங்கு, அதாவது 2,30,000 சதவீதம் வளர்ந்திருந்தன. வேறு எந்தத் துறையிலும் கண்டிராத, கேட்டேயிராத ராட்சத வளர்ச்சி! அப்போதே பிறந்தது முடிவு- தன் எதிர்காலத்தை இன்டர்நெட்டோடு சங்கமித்துக்கொள்ள வேண்டும்.

இ- காமர்ஸ் என்னும் இணையதள வியாபாரத்தில் டிஈஷா இறங்கவேண்டும் என்று முதலாளிக்கு ஆலோசனை சொன்னார். அது வளர்ச்சி காணும் துறையல்ல என்று ஷா மறுத்துவிட்டார். இதனால், ஜெஃப் சொந்தமாக இந்த பிசினஸ் தொடங்கத் தீர்மானித்தார். புத்தக விற்பனையில் தொடங்கி, வழங்கும் பொருட்களை விரிவாக்க வேண்டும். பிசினஸ் ஐடியா ஜெஃப் மனதில் பிறந்து விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது.

உலகின் மிகப் பெரிய அமேசான் நதிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் உண்டு. அதேபோல், தன் கம்பெனியும், புத்தகங்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேலான பொருள்கள் சங்கமிக்கிற இணையதள சந்தையாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். நவம்பர் 1, 1994. ஜெஃப், அமேசான்.காம் என்னும் இணையதளப் பெயரைப் பதிவு செய்தார். ஜெஃப் வாழ்க்கையில் மட்டுமல்ல. உலக இ-காமர்ஸ் வரலாற்றிலும் புதிய சகாப்தம் ஆரம்பம்.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x