

புதுடெல்லி: சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கச் செய்யும் நோக்கில் மத்திய அரசு 2015-ம் ஆண்டு முத்ரா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 40.82 கோடி பயனாளிகளுக்கு ரூ.23.2 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நேற்றோடு 8 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைச் சிறப்பிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 40.82 கோடி பயனாளிகளுக்கு ரூ.23.2 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள். அதேபோல் 51 சதவீத கணக்குகளை எஸ்சி/எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கொண்டிருக்கின்றனர். கடன் உதவி கிடைக்காத சிறு, குறு தொழில்முனைவோருக்கு இத்திட்டம் பெரும் உதவியாக அமைந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. இந்நிறுவனங்கள் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்திய தயாரிப்புகள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன. இந்த நிறுவனங்களின் தொழில் செயல்பாடுகளை முத்ரா யோஜனா திட்டம் கடன் உதவி வழங்கி ஊக்குவிக்கிறது. இதனால், வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன” என்று தெரிவித்தார்.