உலகப் பொருளாதார வளர்ச்சி | 2023-ல் இந்தியாவும் சீனாவும் பிரகாசிக்கும்: ஐஎம்எஃப்

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா
Updated on
1 min read

நியூயார்க்: உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை 2023-ல் இந்தியாவும், சீனாவுமே பாதிப் பங்கை கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் காரணமாக உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் உலக பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறி இருப்பதாவது: ''கரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்ய போர் காரணமாக கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அது இந்த ஆண்டும் தொடரும்.

உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம் இன்னும் 5 ஆண்டுகளுக்குக் குறைவாகவே இருக்கும். உலக பொருளாதார வளர்ச்சி குறித்த எங்களது கணிப்பில், 1990களில் இருந்து மிக குறைவான வளர்ச்சி இருக்கும் என நாங்கள கணித்தது 3.80 சதவீத வளர்ச்சியைத்தான். வரும் ஆண்டுகளில் இது 3 சதவீதத்திற்கும் கீழே குறையும்.

அதேநேரத்தில், வளரும் பொருளாதாரங்களில் ஆசிய ஒரு ஒளிப்புள்ளியாக பிரகாசிக்கிறது. 2023-ல் உலகப் பொருளாதார வளர்ச்சியில் பாதிப் பங்கை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும். கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக பொருளாதாரம் கடந்த 2021-ல் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. எனினும், எதிர்பாராத ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதத்தில் இருந்து 3.4 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

வருவாய் குறைவான நாடுகளில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழ்மையும், உணவுப் பற்றாக்குறையும் மேலும் அதிகரிக்கும். கரோனாவுக்குப் பிறகான அபாயகரமான சூழலாக இது உருவெடுக்கும். வளர்ந்த நாடுகளில் 90 சதவீத நாடுகளின் பொருளாதாரம் இந்த ஆண்டு சரியும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் ஏற்றுமதி குறையும் என்பதால், அவர்கள் கடன் வாங்குவது அதிகரிக்கும். இது மனநிறைவுக்கான நேரம் இல்லை" என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in