

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.45 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து, ரூ.5,690-ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.90 உயர்ந்து ரூ.80.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,900 உயர்ந்து, ரூ.80,700 ஆகவும் இருந்தது.
கடந்த ஜனவரி 3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41,528-ஆகஇருந்தது. இதன்பிறகு, படிப்படியாக உயர்ந்து தற்போது, ரூ.45,520-ஆக அதிகரித்து உள்ளது. 3 மாதங்களில் மட்டும் ரூ.3,992 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 4 வங்கிகள் திவாலாகி விட்டன. ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. பல துறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரிய முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால், விலை உயர்கிறது. வரும் நாட்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.48 ஆயிரத்தை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.