

சென்னை: பல்லடத்தில் தயாரிக்கப்படும் தென்னீரா எனப்படும் நீரா பானத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ஏ.சக்திவேல், நிர்வாக இயக்குநர் கே.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (அபேடா) தலைவர் எம்.அங்கமுத்து, தென்னீராவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அங்கமுத்து பேசும்போது, “தென்னீரா பானம் ஏற்றுமதி நல்ல முயற்சி. இதற்கு அபேடா முழு ஆதரவு அளிக்கும். இதுபோன்ற முயற்சி அனைத்து மாநிலங்களிலும், எல்லா பொருட்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய பாரம்பரிய பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி, கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது. தென்னீராவை 50 நாடுகளில் விற்க வேண்டும். லூலூ, வால்மார்ட் போன்ற மிகப்பெரிய பேரங்காடிகளில் பிரதான பானமாக விற்கப்பட வேண்டும்’’ என்றார்.
தென்னீரா பானம் இறக்குமதியாளரும், ரீஜெண்ட் வட அமெரிக்கா நிறுவன மேலாண்மை இயக்குநருமான கதிர் குருசாமி, டாக்டர் வி.எஸ்.நடராஜன், சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர்.