

சென்னை: தமிழகத்தில் தினசரி 30 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பால் வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை 3.60 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்து உள்ளது.
தமிழக அரசு ஆவின் மூலம் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி நீல நிறம், பிங்க் நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம் என்று 4 வகையான பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகர்புறங்களில் அதிக மக்கள் ஆவின் பாலை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், 2022 - 2023ம் ஆண்டில் தினசரி ஆவின் பால் விற்பனை 30 லட்சம் லிட்டராக அதிகரித்து உள்ளதாக பால் வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 - 2022ம் ஆண்டில் தினசரி ஆவின் பால் விற்பனை 26.41 லட்சம் லிட்டராக இருந்தது. இதன்படி கடந்த ஆண்டில் ஆவின் பால் விற்பனை 3.60 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.
இதுபோன்று விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது. 2022-2023-ம் ஆண்டில் விற்பனை மூலம் ரூ.7,898 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2021 - 2022ம் நிதி ஆண்டில் விற்பனை மூலம் ரூ.7,595 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி விற்பனை வருவாய் ரூ.303 கோடி அதிகரித்துள்ளது.