

சென்னை: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நான்கு பிரபல கார் மாடல்களை க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி உள்ளது குளோபல் என்சிஏபி. அந்த சோதனையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்-ஆர் (Wagon R) மாடல் கார் ஒரே ஒரு ஸ்டார் மட்டுமே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் ஐக்கிய நாடுகளின் மிக முக்கிய மோட்டார் வாகன பாதுகாப்பு தரநிலைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயங்கி வருகிறது குளோபல் என்சிஏபி (New Car Assessment Programme). இதன் சார்பில் இந்திய தயாரிப்பு கார்களின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதிக்கும் நோக்கில் அண்மையில் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் மாருதி, வோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனத்தின் நான்கு மாடல் கார்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
அதில் மாருதி சுசுகி வேகன்ஆர் காரில் பெரியவர்கள் (அடல்ட்) பாதுகாப்பை பொறுத்த வரையில் ஒரு ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது. இதே காருக்கு குழந்தைகள் பாதுகாப்பை பொறுத்த வரையில் ஸ்டார் எதுவும் வழங்கப்படவில்லை. மாருதியின் ஆல்டோ கே10 காருக்கு அடல்ட் ப்ரொட்டக்ஷனில் இரண்டு ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது.
வோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா செடான் மாடல் கார்கள் ஐந்து ஸ்டார்களை இந்த சோதனையில் பெற்றுள்ளன. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் பாதுகாப்பு குறித்து கவலை இருப்பதாக என்சிஏபி இந்த சோதனை முடிவில் தெரிவித்துள்ளது.
இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த நிறுவன கார்களின் பாதுகாப்பு தொடர்பான ரேட்டிங் சங்கடம் தந்துள்ளது. இந்த சோதனை நடப்பு ஆண்டுக்கான இந்திய சந்தைக்கான முதல் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.