Published : 05 Apr 2023 06:01 AM
Last Updated : 05 Apr 2023 06:01 AM
கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருவதாகவும் மார்ச் மாதத்தில் மட்டும் 117 டன் எடையிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை விமான நிலைய வளாகத்தில் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சரக்கக வளாகத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சரக்கு போக்குவரத்து கையாளப்படுகிறது.
உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஜவுளிப்பொருட்கள், பொறியியல் உற்பத்தி பொருட்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் அதிகளவு கையாளப்படுகின்றன. வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் காய்கறிகள், பழங்கள், பொறியியல் உற்பத்தி பொருட்கள் கையாளப்படுகின்றன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாட்டு சரக்கு போக்குவரத்து பிரிவில் வழக்கமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் தான் அதிகம் கையாளப்படும். கடந்த மூன்று மாதங்களாக பொறியியல்துறை சார்ந்த பொருட்களும் அதிகளவு கையாளப்படுகின்றன. ஜனவரி மாதம் 94 டன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
பிப்ரவரி மாதத்தில் 83 டன்னாக சற்று குறைந்த நிலையில் மார்ச் மாதம் 117 டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஜனவரியில் தொடங்கி மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டும் சேர்த்து மொத்தம் 324 டன் எடையிலான பொருட்கள் கையாளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT