

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ‘இ-நாம்’ திட்டம் மூலம் நேற்று கொப்பரை தேங்காய் ஏல முறை விற்பனை நடைபெற்றது. இதில், 551 கிலோ கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.79.90-க்கு விற்பனையானது. அதன்படி ரூ.42 ஆயிரத்து 579-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இதுதொடர்பாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அருள் வேந்தன் கூறிய தாவது: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ‘இ-நாம்’ (தேசிய மின்னணு வேளாண் சந்தை) முறையில் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி கடந்த 2 மாதங்களில், `இ-நாம்' முறையில் கொப்பரை தேங்காய், பருத்தி, கொள்ளு, காராமணி, பாசிப்பயறு உள்ளிட்டவை ரூ.8 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இதற்கான விற்பனைத் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப் பட்டன. இங்கு காய்கறி, பழங்கள் நீங்கலாக அனைத்து விளை பொருட்களையும் சந்தைப் படுத்தலாம்.
இதில், உள்ளூர், வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் மின்னணு முறையில் கலந்து கொள்கின்றனர். இதனால், விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
எனவே, விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ‘இ-நாம்’ முறையில் விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.