Published : 06 Sep 2017 10:28 AM
Last Updated : 06 Sep 2017 10:28 AM

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பேட்டரி கார்களை அறிமுகப்படுத்துவோம்: மாருதி சுசூகி தலைவர் ஆர்.சி. பார்கவா கருத்து

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரியில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நீண்ட காலத்துக்கு பேட்டரி கார் தயாரிப்பை நிறுத்தி வைக்க முடியாது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பேட்டரி கார்களை அறிமுகம் செய்வோம் என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்தார்.

நிறுவனத்தின் 36-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பார்கவா மேலும் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப பேட்டரி வாகனங்களை அறிமுகம் செய்வோம். இதற்கிடையில் ஏற்கெனவே இருக்கும் வாகனங்களின் எரிபொருள் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோம். இதற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். சுசூகி நிறுவனத்தின் உதவியுடன் இரட்டை இலக்க வளர்ச்சியை நம்மாலும் அடைய முடியும். 2020-ம் ஆண்டில் 20 லட்சம் வாகனங்களை விற்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் 25 லட்சம், 30 லட்சம் என விற்பனை இலக்குகள் உயர்த்தப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சீர்திருத்தங்கள் காரணமாக, பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என நம்புகிறேன். இதனால் கார்களின் தேவை அதிகரிக்கும் என்றார்.

பாதுகாப்பு துறையில் ஈடுபடுவீர்களா என முதலீட்டாளர்களின் கேள்விக்கு, கவனமாக பரிசீலனை செய்யப்படும் என்றார். போனஸ் பங்கு வழங்கப்படுமா என்னும் முதலீட்டாளர்களின் கேள்விக்கு, அதற்கு பதிலாக டிவிடெண்ட் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பாதிக்கும் மேல் மாருதி சுசூகி வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x