Published : 05 Jul 2014 10:00 AM
Last Updated : 05 Jul 2014 10:00 AM

6 விஷயமிருந்தால் பிராண்ட் பிரபலமாகும்

தொழில் துவங்க ஐடியா தேவை. ஐடியாவை பொருளாக்க தயாரிப்பு திறன் தேவை. தயாரித்த பொருளை பிராண்டாக்க பொசிஷனிங் தேவை. பிராண்டிற்கு உயிர் கொடுக்க பர்சனாலிடி தேவை. பிராண்டிற்கு உணர்ச்சி தர, உணர்வு சேர்க்க, உத்வேகத்துடன் செயல்படவைக்க பிராண்ட் எலிமெண்ட்ஸ் தேவை. இது தான் இந்த வார சப்ஜெக்ட்.

பிராண்ட் எலிமெண்ட்ஸ் என்பது பிராண்டை முழுமையாக்க, தனித்துமாகத் தெரிய வைக்க, போட்டியாளரிடமிருந்து வித்தியாசப்படுத்த, ரிஜிஸ்டர் செய்யக்கூடிய பெயர், லோகோ, பேஸ்லைன், பேக்கேஜிங், கேரக்டர், வெப்சைட், ஜிங்கிள், ஸ்போக்ஸ்பர்சன் போன்றவை. இதை பிராண்ட் ஐடெண்டிடீஸ் என்றும் கூறலாம். பிராண்ட் பெயர் பற்றி போன வாரம் பார்த்தோம். மற்ற எளிமெண்ட்ஸை வடிவமைக்கும் வழியை இப்பொழுது பார்ப்போம்.

பொதுவாகவே தொழிலதிபர்கள் சிலர் தங்களை விளம்பர நிபுணர்கள் என்று விபரீதமாக கற்பனை செய்து தொலைப்பார்கள். தானாக ஒரு லோகோ தயாரித்து, தனக்கு பிடித்த கலரை அடித்து, தெரிந்த மொழியில் பேஸ்லைன் எழுதி, யாரோ சொன்னார் என்று வெப்சைட் திறந்து, கிடைத்த டப்பாவில் பிராண்டை போட்டு விற்க முயன்று அது விற்காதபோது ‘நல்லதுக்கு காலமே இல்லை’ என்று ஒரு பாடு ஒப்பாரி வைப்பார்கள்.

விளையாட்டாய் பிராண்ட் எளிமெண்ட் ஸை வடிவமைத்தால் வினையாக, விபரீதமாக, வில்லங்கமாகத்தான் முடியும்.

சரியாக எளிமெண்ட்ஸை வடிவமைத்தால் பிராண்ட் மக்கள் கண்ணில் படும். போட்டி மத்தியிலும் பளீரென்று தெரியும். தனித்துவமாகத் திகழும். கையில் எடுத்துப் பார்க்க வைக்கும். வாடிக்கையாளரை வாங்கத் தூண்டும். தூண்ட வேண்டும். எலிமெண்ட்ஸ் வடிவமைக்கும் போது வழிகாட்டும் ஆறு விசேஷ விஷயங்களை விவரிப்போம்.

மனதைக் கவரும்படி இருக்கவேண்டும் (Memorability)

பிராண்ட் எலிமெண்ட்ஸ் வாடிக்கையாளரின் மனம் கவர வேண்டும். மனதைக் கவர்ந்தால்தானே மறக்க முடியாததாக இருக்கும். மறக்காமல் இருந்தால்தான் வாடிக்கையாளரை மறுக்காமல் வாங்க வைக்கும்!

’நைக்கி’ பிராண்டின் டிக் மார்க் போன்ற லோகோவிற்கு ஸ்வூஷ் என்று பெயர். இது பலருக்குப் பிடித்தது மட்டுமில்லாமல் லோகோவை பார்த்தாலே அனைவருக்கும் நைக்கி பெயர் டக்கென்று நினைவிற்கு வரும். அதேபோல் நைக்கியின் பேஸ்லைன் ‘ஜஸ்ட் டூ இட்’. பிராண்ட் பெயரை விடுங்கள், இந்த பேஸ்லைனைக் கேட்டாலே நைக்கி என்று தெரிந்து விடுகிறது. பிராண்ட் எளிமெண்ட்ஸை இப்படி மனதைக் கவர்ந்து மறக்க முடியாதபடி வடிவமைப்பது அவசியம்.

அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் (Meaningfulness)

பிராண்ட் எலிமெண்ட்ஸ் மனதை கவர்வதோடு பொருள் வகைக்கேற்ப, பொசினிஷிங் மற்றும் பிராண்ட் பர்சனாலிடிக்கேற்ப அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ‘ரின்’ டிடெர்ஜெண்டின் லோகோ ‘மின்னல்’. அதன் பேஸ்லைன் ‘மின்னலடிக்கும் வெண்மை’. மின்னலைப் போல் வெண்மை தருகிறோம், அதுவும் வேகமாகத் தருகிறோம் என்று இதைவிட பொருத்தமாக ஒரு டிடெர்ஜண்ட் பிராண்டால் வேறு எப்படிக் கூற முடியும்.

புதிய ஷாம்பு பிராண்டுகளின் வரவால் ’சன்சில்க்’ சற்றே வயதான பர்சனாலிடியைப் பெற்றுவிட்டது. சன்சில்கை மீண்டும் இளமையாக்கி இளம் பெண்களை வாங்கவைக்க பல முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்று பிராண்டின் பிரத்யேக வெப்சைட். அதற்கு ‘சன்சில்க்.காம்’ என்று பெயரிடாமல் ‘கேங் ஆஃப் கர்ல்ஸ்.காம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. எத்தனை அர்த்தமுள்ள, பொருத்தமான பெயர் பாருங்கள்.

வாடிக்கையாளருக்குப் பிடிக்க வேண்டும் (Likeability)

மனதிற்கு ஒன்று பிடித்து விட்டால் மற்றதெல்லாம் அடுத்த பட்சம்தான். அதே போல் பிராண்ட் எலிமெண்ட்ஸ் வாடிக்கை யாளருக்குப் பிடித்தி ருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். ’ரேமண்ட்’ விளம்பரங்களின் ஜிங்கிள் ஆகட்டும், ’அமுல்’ விளம்பரங்களில் வரும் சின்னப் பெண் காரெக்டர் ஆகட்டும், ‘பிரிட்டானியாவின்’ டின் டின் ட டின் என்ற இசையாகட்டும் இவை வாடிக்கையாளர்களுக்குப் பிடித்திருப்பதால்தான் அந்த பிராண்டுகளும் பிடிக்கிறது. பிராண்டுகளின் விற்பனையும் பறக்கிறது.

எளிதில் மாற்றக்கூடியதாக இருக்கவேண்டும் (Transferability)

பிராண்டை வேறு பொருள் வகைகளுக்கு, வேறு மார்க்கெட் டுகளுக்கு எடுத்துச் செல்லும்போது எளிமெண்ட்ஸை அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைப்பது முக்கியம். பசுவின் பால் என்று பொருள் பட ’ஆவின்’ என்று பெயரிட்டால் இங்கு ஓகே. இதே பிராண்டை ஆந்திராவிற்கு எடுத்துச் செல்லும்போது அங்கு யாருக்கு புரியப்போகிறது? ஆவின்லூ என்று மாற்றினால்தான் உண்டு!

மாற்றங்களுக்கு ஏதுவாக இருக்கவேண்டும் (Adaptability)

காலம் மாறி வருகிறது. வாடிக்கை யாளர் எண்ணங்கள் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் அழாகாக தெரிந்த லோகோ இன்று ஆர்டினரியாகத் தெரிகிறது. கடந்த காலத்தில் கவர்ச்சியாக தெரிந்த கலர் இன்று கண்றாவியாகப் படுகிறது. அதனால், பிராண்ட் எளிமென்ட்ஸை காலத்திற்கேற்ப, மாறி வரும் ரசனைகளுக்கேற்ப மாற்றம் செய்யும் வகையில் வடிவமைப்பது அவசியம்.

பிராண்ட் பெயரை மாற்றுவது எளிதான காரியமல்ல என்றாலும் கலர், லோகோ, பேஸ்லைன் போன்றவற்றை மாற்ற வேண்டிவரும். சில வருடங்களுக்கு முன் ‘அருண்’ ஐஸ்க்ரீம் லோகோ படிப்பதற்கு எளிதாகவும், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி சற்றே மாற்றப்பட்டது. ஆனால் என்ன மாற்றப்பட்டது என்று யாருக்கும் தெரியாத வண்ணம் திறமையாக மாற்றப்பட்டது. ‘கூகுள்’ செய்து பாருங்கள். என்ன செய்தார்கள் என்று புரியும்.

பாதுகாக்கப்படும்படி இருக்க வேண்டும் (Protectability)

மனை வாங்கினால் மட்டும் போறாது. அதை வேலி கட்டி பாதுகாக்க வேண்டும். அது போல் எளிமெண்ட்ஸை வடிவமைத்தால் மட்டும் போறாது. அதை சட்டப்பூர்வமாக பாதுக்காக்க ரிஜிஸ்டர் செய்யவேண்டும். முதல் வேலையாக பெயரை ரிஜிஸ்டர் செய்யுங்கள். பல கம்பெனிகள் பேஸ்லைனைக் கூட ரிஜிஸ்டர் செய்வார்கள். நைக்கி பேஸ்லைனை கொஞ்சம் காப்பியடித்துத் தான் பாருங்களேன். கழட்டி அடிப்பார்கள். தே வில் ஜஸ்ட் டூ இட்!

பிராண்ட் எலிமெண்ட்ஸ் வடிவமைக்கும்போது இந்த ஆறு கைட்லைன்ஸையும் அனுசரித்து வடிவமைப்பது சிரமம்தான். அதனால் எலிமெண்ட்ஸ் அனைத்தையும் ஒரு கோர்வையாய் ஒன்றை ஒன்று சப்போர்ட் செய்யும்படி வடிவமைக்கவேண்டும்.

’லக்ஸ்’ சோப்பை எடுத்துக்கொள்ளுங்கள். பிரீமியம் பிராண்ட் என்பதால் லக்‌ஷுரி என்ற வார்த்தையின் சுருக்கமாக ‘லக்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. கவர்ச்சி லுக் தருவதால் ‘சினிமா ஸ்டார்களின் அழகு சோப்’ என்ற பேஸ்லைன் தரப்பட்டது. அதனால் சினிமா நடிகை கொண்டு விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மிருதுவான சருமம் தருவதால் வழவழப்பான பேப்பரில் பாக்கிங் செய்யப்படுகிறது. கையில் ஈசியாய் பிடிக்கும் வகையில் சோப்பின் ஷேப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பெயர், லோகோ, பேஸ்லைன், பாக்கேஜிங், ஸ்போக்ஸ்பர்ஸன் என்று பிராண்ட் எலிமெண்ட்ஸ் ஒவ்வொன்றும் ஒருசேர ஒன்றோடு ஒன்று ஒத்து வரும்படி அழகாக வடிவமைக்கப்பட்டிருப்

பதால்தான் லக்ஸை தொட்டாலே கதாநாயகியை தொடுவது போன்ற உணர்வு நமக்கு! எலிமெண்ட்ஸ் லாஜிக்காய் இருப்பதால் லக்ஸ் மேஜிக்காய் மின்ன முடிகிறது.

’ப்பூ இவ்வளவுதானா, ஆறு ஐட்டங்களையும் மனதில் வைத்து இனி சூப்பராய் நானே எலிமெண்ட்ஸ் அமைக்கிறேன்’ என்று மீண்டும் வேதாளமாய் முருங்கைமரம் ஏறி வராத வேலையை வற்புறுத்தி செய்து தொலைக்காதீர்கள்.

திறமையானவர்களிடம் வேலை யை ஒப்படையுங்கள். அவர்கள் வடிவமைத்துத் தரும் எலிமெண்ட்ஸ் ஆறு கைட்லைன்ஸ் படி இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். அது போதும்.

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி- satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x