Published : 04 Apr 2023 06:31 AM
Last Updated : 04 Apr 2023 06:31 AM
சென்னை: சென்னை துறைமுகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-23-ம் நிதியாண்டில், ரூ.150 கோடியும், காமராஜர் துறைமுகம் ரூ.700 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன என இத்துறைமுகங்களின் தலைவரான சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை துறைமுகம் 3-வதுபழமையான பெரிய துறைமுகமாகும். வாகனங்கள், உரங்கள்,தானியங்கள், கனரக இயந்திரங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகையாளப்பட்டு வருகின்றன.
இத்துறைமுகத்தில் 2022-23-ம்ஆண்டில் 48.95 மில்லியன் மெட்ரிக்டன் அளவு சரக்கு கையாளப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 0.8 சதவீதம் அதிகமாகும்.
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து கடந்த2022-23-ம் ஆண்டில் 3.8 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. 2021-22-ம் ஆண்டில் சென்னை துறைமுகத்துக்கு 1,444 சரக்குக் கப்பல்கள் வருகை தந்தன. 2022-23-ம் ஆண்டில் 1,616 கப்பல்கள் வருகை தந்தன.
சென்னை துறைமுகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-23-ம் ஆண்டில் ரூ.150 கோடி லாபம் கிடைத்துள்ளது. காமராஜர் துறைமுகத்தைப் பொறுத்தவரை 2022-23-ம் ஆண்டில் 43.51 மில்லியன் மெட்ரிக் டன்அளவு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 43.51 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும், காமராஜர் துறைமுகம் முதன்முறையாக 2022-23-ம்ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம், காமராஜர் துறைமுகத்துக்கு நிகர லாபமாக ரூ.669.93 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது 2021-22-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.82 சதவீதம் அதிகம் ஆகும்.
சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக 300 கிலோவாட் திறன் கொண்ட ஆலை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் கப்பல் சுற்றுலாவை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் 2023-24-ம் ஆண்டில் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் 100 மில்லியன் டன் அளவு சரக்குகளைக் கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்துக்கான டெண்டர் வரும் 6-ம் தேதியன்று இறுதி செய்யப்படும். வரும் ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்படும். இதில், கோயம்பேடு-மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டுள்ள தூண்கள் அப்படியே பயன்படுத்தப்படும்.
மதுரவாயல்-துறைமுகம் இடையே ஈரடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதனால், பாலத்தின் உறுதித் தன்மையைக் கருத்தில் கொண்டு கூவம் ஆற்றின் ஓரம் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் இடிக்கப்படும் என்றார். சென்னை துறைமுக துணைத் தலைவர் பாலாஜி அருண்குமார் மற்றும் இரு துறைமுகங்களின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT