

சென்னை: பழைய பொருட்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று பழைய பொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் இயங்கி வரும் சென்னை மாநகர பழைய பொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை திருமங்கலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பழைய பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் இ.எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின்னர் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பழைய பொருட்கள் என்றுசொல்லப்படும் கழிவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடித்தட்டு, ஏழை எளிய வணிகர்களே சிறு சிறு அளவில் கொள்முதல் செய்வதால், அனைத்து பழைய பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்ற ஒரே வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும்.
இத்தொழிலில் ஈடுபடுவோர் வணிக வரித்துறை, போக்குவரத்து காவல்துறையால் பல்வேறு அச்சுறுத்தல்-களுக்கு ஆளாகி வருவதை தடுக்க வேண்டும், வணிக வரி மாவட்ட எல்லைகளில் மாதந் தோறும் ஜிஎஸ்டி சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.