Last Updated : 10 Sep, 2017 01:54 PM

 

Published : 10 Sep 2017 01:54 PM
Last Updated : 10 Sep 2017 01:54 PM

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் நீடிக்க முடியாததற்கு சிகாகோ பல்கலை. விடுப்புச் சிக்கல் காரணமல்ல: ரகுராம் ராஜன்

சிகாகோ பல்கலைக் கழகம் விடுப்பை நீட்டிக்காததே மத்திய ரிசர்வ் வங்கி கவர்னராக அவர் இரண்டாம் கட்டப் பதவியில் நீடிக்க முடியாததற்குக் காரணம் என்று கூறப்படுவதை ரகுராம் ராஜன் முற்றிலும் மறுத்தார்.

3 ஆண்டுகால பதவிக்காலம் முடிந்தவுடன் மத்திய அரசிடமிருந்து தான் தொடர்வதற்கான எந்த ஒரு முன்மொழிவும் இல்லை என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறினார் ரகுராம் ராஜன்.

1992 முதல் ஆர்பிஐ கவர்னர் பதவி வகித்தவர்களில் இரண்டாம் முறை நீட்டிக்கப்படாமல் சென்ற முதல் கவர்னர் ஆவார் ரகுராம் ராஜன்.

பொருளாதார சீர்த்திருத்தங்கள் பற்றிய தனித்த கருத்தைக் கொண்டிருந்த ரகுராம் ராஜன் வங்கிகளின் வாராக்கடன் விவகாரங்களை தீர்ப்பதற்கு படாத பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் சுப்பிரமணிய சுவாமி முதல் ஆளும் பாஜக-வினர் ரகுராம் ராஜன் நீடிப்பதை பலவித காரணங்களினால் விரும்பவில்லை.

ஆர்பிஐ-யின் அதிகார எல்லைகளைக் குறைத்து நிதிக்கொள்கைகளை தங்கல் கைகளில் மத்திய அரசு கொண்டு செல்ல நினைத்தபோது இவர் கடுமையாக எதிர்த்தார். நாட்டில் நிலவி வரும் சகிப்புத்தன்மையற்ற நிலைமைகளையும் கண்டித்தார்.

அவருக்கு இன்னொரு பதவிக்காலம் அளிக்க முடியாமல் போனது குறித்து பலதரப்புகளிலிருந்தும் சர்ச்சைகள் எழுந்த போது, மத்திய அரசுக்கு நெருக்கமான வட்டங்கள் கூறியதென்னவெனில் சிகாகோ பல்கலைக் கழகத்தில் அவருக்கு விடுப்பு நீட்டிப்பு வழங்குவது கடினம் என்று கூறப்பட்டது.

இதனை கடுமையாக மறுத்த ரகுராம் ராஜன், “இதனை நான் முற்றிலும் மறுக்கிறேன், அது விவகாரமேயல்ல.

பலகலைக் கழகம் என் நலன் கருதுவதாகும், நான் எவ்வளவு காலம் விடுப்பு விரும்புகிறேனோ அதனை அளிக்க சிகாகோ பல்கலைக் கழகம் தயாராகவே இருந்தது” என்று கூறிய ரகுராஜன், ஆர்பிஐ பதவி நீட்டிப்புக்காக தான் மத்திய அரசின் கதவுகளை ஒருபோதும் தட்டியதில்லை என்றார். வங்கிகளின் வாராக்கடன் விவகாரத்தை சீர்த்திருத்தம் செய்ய விருப்பத்தைத் தான் சுட்டிக்காட்டியதாகவும் அதனால் ஆர்பிஐ பதவியில் நீடிக்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.

“எனக்கு 3 ஆண்டுகால பதவி அளிக்கப்பட்டது. அரசு எனக்கு அளித்த ஒப்பந்த காலம் அதுதான், 3 ஆண்டுகால பதவி முடிவுக்கு வந்தது. அவ்வளவுதான், இப்போது நான் வேறு பணியில் இருக்கிறேன்” என்றார் ரகுராம் ராஜன்.

இதுதான் முதன்மைக் காரணம் இதற்கு நான் திறந்த மனதுடன் தான் இருந்தேன், ஒப்பந்தம் இருந்ததால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை” என்றார் ராஜன்.

இரண்டாவது காலத்திற்கு பதவி நீட்டிப்பு கிடைகாதது பற்றி மோசமாக உணர்ந்தீர்களா என்று அவரிடம் கேட்ட போது, “என்ன காரியங்களை பூர்த்தி செய்தோமோ அதில் நான் கவனம் செலுத்தி வந்தேன். என்னைப் பொறுத்தமட்டில் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினேனோ அதனைப் பூர்த்தி செய்ததாகவே உணர்கிறேன். மேலும் சில பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்பினேன், வாராக்கடன் விவகாரத்திற்கு தீர்வு காண முயற்சி செய்தேன், அதனால் என்ன, நான் இல்லையென்றால் மற்றவர்கள் இருக்கிறார்கள். ஒரு வசனம் உண்டு. கல்லறை முழுதும் தவிர்க்க முடியாத மனிதர்கள் இருக்கின்றனர் என்று ஒரு வசனம் உண்டு. எனவே மக்கள் நகர்ந்து கொண்டேயிருப்பார்கள்” என்றார்.

சுப்பிரமணியன் சுவாமி ரகுராம் ராஜனை, “மனத்தளவில் அவர் முழு இந்தியராக இல்லை” என்று விமர்சனம் செய்தார், அது குறித்து இப்போது கருத்து கூற விரும்புகிறீர்களா என்று கேட்ட போது, “இல்லை! சிலது பற்றி கருத்து கூறாமல் இருப்பதே நல்லது, இவற்றைப் பற்றி நாம் பேசத் தொடங்கினால், அதற்குத் தகுதியற்ற ஒரு மதிப்பை நாம் வழங்குவதாகிவிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x