

திருவனந்தபுரம்: உலகின் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படும் ஜி-20-ல் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவுதிஅரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றது. இதையொட்டி ஓராண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி - 20 அமைப்பின் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜி 20 அமைப்பின் 4 நாள் மாநாடு கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாதலமான குமரகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா. சபை, உலக வங்கியின் பிரதிநிதிகள் உட்பட 120 பேர் பங்கேற்று உள்ளனர்.
இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் நேற்று உரையாற்றினார். அவர் பேசும்போது, “இந்தியாவில் நடைபெறும்ஜி- 20 மாநாடு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் முரளிதரன் கலந்துரையாடினார்.
இந்த மாநாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, சுற்றுலா, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
முன்னதாக ஜி-20 பிரதிநிதிகளுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. குமரகத்தின் பிரபலமான மிதக்கும் வீடுகளில் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.