தங்க நகைகளை விற்பனை செய்ய ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இன்று முதல் கட்டாயம்

தங்க நகைகளை விற்பனை செய்ய ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இன்று முதல் கட்டாயம்
Updated on
1 min read

கோவை: ஆறு இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (எச்யுஐடி) இல்லாத தங்க நகைகள், கலைப்பொருட்கள் விற்பனைக்கு இன்று (ஏப்.1) முதல் அனுமதி இல்லை என இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிஐஎஸ் கோவை கிளை தலைவர் வி.கோபிநாத் கூறியதாவது: நுகர்வோர் வாங்கும் தங்க நகையில் மூன்று கட்டாய குறியீடுகள் இருக்கும். அதில், முதலாவது பிஐஎஸ் முத்திரை, இரண்டாவது தங்கத்தின் தூய்மை (22K916), மூன்றாவதாக எண்கள், எழுத்துகளைக் கொண்ட ஆறு இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (எச்யுஐடி) இருக்கும்.

ஒவ்வொரு தனிப்பட்ட நகைக்கும் எச்யுஐடி என்பது தனித்துவமானது. நகை வாங்கும் முன்பு இந்த மூன்று குறியீடுகளும் உள்ளனவா என்று பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும். பிஐஎஸ்-ஆல் பதிவு பெற்ற நகை விற்பனையாளர்கள், எச்யுஐடி எண்ணுடன் ஹால்மார்க் செய்த தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 2 கிராமுக்கு குறைவான எடை உள்ள தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமில்லை. நகை விற்பனையாளர்கள் எச்யுஐடி, ஹால்மார்க் இல்லாத நகைகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நுகர்வோர், நகை வாங்குவோர் BIS CARE செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, VERIFY HUID என்ற அம்சத்தை பயன்படுத்தி எச்யுஐடி எண்ணுடன் ஹால்மார்க் செய்த தங்கநகைகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளலாம். தங்க நகையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0422-2240141, 2249016, 2245984 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நுகர்வோர் புகார் அளிக்கலாம் அல்லது புகார் குறித்த விவரங்களை cbto@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in