

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 1,031 புள்ளிகள் (1.78 சதவீதம்) உயர்ந்து 58,991 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 279 புள்ளிகள் (1.63 சதவீதம்) உயர்வடைந்து 17,359 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 631.35 புள்ளிகள் உயர்வடைந்து 58,591.44 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 185.05 புள்ளிகள் உயர்வடைந்து 17,265.75 ஆக இருந்தது.
அமெரிக்க வங்கி நெருக்கடிகளின் அச்சம் நீங்கியதால் விளைந்த உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், ஹெவிவெயிட் பங்குகள், நிதிப் பங்குகளின் உயர்வு, வெளிநாட்டு நிதி வரவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள், 2022 - 2023 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளை 1 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தில் நிறைவு செய்தன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,068 வரை உயர்ந்தது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,031.43 புள்ளிகள் உயர்வடைந்து 58,991.52 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 279.10 புள்ளிகள் உயர்வடைந்து 17,359.80 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 31) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.44,720-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,590-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,216 க்கு விற்பனையாகிறது. இதன்படி தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.7,500-ஆக இருக்கிறது.